Tuesday, December 11, 2012

எங்க வீட்டு சினிமா!



ஊருக்குள் எங்கே மைக் செட் கட்டி பாட்டு போட்டுக் கொண்டிருந்தாலும் இரவு ஏழு மணியானால் மைக் செட் காரனை எங்கள் வீட்டில் பார்க்கலாம். ஏழு மணி என்பது என் அப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வந்து குளியல் முடிந்து ஈஸி சேரில் தெருவோரமாக முற்றத்தில் அமர்ந்திருக்கும் நேரம். கையில் புகையும் சிகரெட்டை ஒருமுறை இழுத்துக் கொண்டு புகையோடு வார்த்தைகளை ஊதுவார்.
‘‘என்னடே... யார் வீட்டுல விசேஷம்..?’’ பதிலுக்கு கூட காத்திருக்காமல் அடுத்த கேள்வி வந்து விழும்.
‘‘தில்லானா மோகனாம்பாள் கொண்டாந்துருக்கியா..?’’ மைக் செட் காரனின் தலை வேகமாக ஆடும்... ‘‘இருக்கு ஐயா... வசந்தமாளிகைகூட வெச்சிருக்கேன்...’’ என்பான். அப்பா லேசாக எக்கி வேட்டி மடிப்பில் இருந்து ஐந்து ரூபாய் தாளை எடுத்து அவனிடம் கொடுப்பார். ‘‘இன்னைக்குதில்லானா மோகனாம்பாள்போடு...’’ என்பார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் தில்லானா மோகனாம்பாள் திரைப்பட வசனம் ஒலிக்கத் தொடங்கும். ஒரு வீட்டு விசேஷத்துக்கு மைக் செட் கட்டி ரெண்டுநாள் அலற விட்டால் அவனுக்கு கிடைக்கும் பணம் எழுபது ரூபாய். ஆனால், ரெண்டு நாளும் ராத்திரி ரெண்டு சிவாஜி பட வசனங்களைப் போட்டு பத்து ரூபாய் சம்பாதித்துக் கொண்டு போய்விடுவான். அப்பாவுக்கு சிவாஜி என்றால் உயிர்.
அப்போதெல்லாம் நாங்கள் சின்னப் பிள்ளைகள் என்பதால் அப்பா சிவாஜி படங்களை ரிலீஸ் அன்றே போய்ப் பார்ப்பாரா இல்லை, நிதானமாகப் பார்ப்பாரா எனத் தெரியாது. ஆனால், அந்தமான் காதலி படத்தில் முதல் காட்சியில் சிவாஜி எந்த கலர் சட்டை போட்டிருந்தார் என்ற தகவல் எல்லாம் விரல் நுனியில் வைத்திருந்தார். எனக்கு விவரம் தெரிந்தபோதே எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்து அதிமுகவையும் ஆரம்பித்துவிட்டார். சிவாஜி ரசிகன் என்பதாலேயே அப்பா எம்.ஜி.ஆரைப் பிடிக்காதவராகவும் இருந்தார். அதனாலேயே தி.மு.. அனுதாபியாகவும் இருந்தார். சிவாஜி காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்தாலும் அப்பா அதையும் நடிப்பு கணக்கில் சேர்த்துவிட்டிருந்தார் போலும். அவரது மேடைப் பேச்சுகளை ரசிப்பார். ஆனால், வோட்டு என்னவோ திமுகவுக்குதான். சிவாஜியும் தீர்மானமாக தன் ரசிகர்களிடம் நீ நான் சொல்லும் சின்னத்தில்தான் வோட்டு போடவேண்டும் என்று வலியுறுத்தாததால் அப்பாவுக்கு எந்த தர்மசங்கடமும் இல்லை.
மற்றபடி அப்பாவின் பேச்சில் எங்காவது ஓர் இடத்தில் சிவாஜி எட்டிப் பார்த்துவிடுவார். என் தாய்மாமா நீண்ட இடைவெளிக்குப் பிறகு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். என் அம்மா மீது அவருக்கு அபார பாசம். பட்டாசாலையில் இருந்த வால்வ் ரேடியோவில் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல...’ பாடல் ஒலிக்கத் தொடங்க கண்ணில் நீர் கட்ட என் மாமா ரேடியோ அருகே அமர்ந்திருந்தார். எழுந்து உள்ளே போன அப்பா அதேவேகத்தில் வந்து எங்களிடம்சிவாஜி இங்க உக்காந்து அழுவுறாரு... சாவித்திரி அடுக்களைல உக்கார்ந்து அழுவுதா...’ என்று கேலியாகச் சொல்ல, நாங்கள் ஓடிச் சென்று அடுக்களையில் தோசைக்கல் முன்னால் உட்காந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்துச் சிரித்தோம். அதைத் தவிர வேறு எந்த சந்தர்ப்பத்திலும் அப்பா சிவாஜியை வேறு யாருடனும் ஒப்பிட்டதில்லை.
தேவர் மகன் ரிலீஸ் சமயத்தில்கூட, ‘நல்லாப் பாரு... கமலஹாசன் கண்ணுல ஒரு பயம் தெரியும் பாரு...’ என்று தன் கட்சி வாதங்களை வைத்துக் கொண்டேதான் இருப்பார். சிவாஜிக்கு ஆதரவு திரட்டும் அதேநேரத்தில் என் அண்ணனை லேசாகச் சீண்டுவது போலவும் இருக்கும். சிவாஜியின் கலை வாரிசாக கமல் இருந்த காரணத்தாலோ என்னவோ என் அப்பாவின் வாரிசான என் அண்ணன் கமல் ரசிகனாக இருந்தார்.
எங்கள் வீட்டுச் சுவர்களில் கமல்ஹாசனின் சித்திரங்கள் இடம் பிடித்திருக்கும். ஊர்த் திருவிழாவில் கமல் போலவே நடனம் எல்லாம் ஆடிப் பார்த்திருக்கிறார். எல்லா கமல் ரசிகர்களையும் போலவே குணா, மகாநதி போன்ற படங்களை சிலாகித்துக் கொண்டும் சகலகலா வல்லவன், சிங்கார வேலன் போன்ற படங்களை கமல் தவிர்த்திருக்கலாம் என்றும் சொல்லிக் கொண்டு திரிந்தார் என் அண்ணன். அப்போது வீட்டுக்கு வரும் வார பத்திரிகைகளில் வெளியாகும் கமல் படங்களை வெட்டி ஒட்டி ஆல்பம் செய்வதும் கமல் பாட்டு புத்தகங்களை வாங்கி மனப்பாடம் செய்வதும் அவருடைய வேலை.
ஒரு வீட்டில் இரண்டு ஆண்பிள்ளைகள் இருந்து அவர்களில் ஒருத்தன் கமல் ரசிகனாக இருந்தால் இன்னொருவன் ரஜினி ரசிகனாக இருக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டு குடும்ப நிலவரப்படி எங்கள் வீட்டில் நான் ரஜினி ரசிகன். நாலாம் வகுப்பு பள்ளிக்கூட குரூப் போட்டோவில் லேசாக தலையைச் சாய்த்து கண்ணை மூடிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து இப்போதும் பலர் ஏன் கண்ணை மூடிகிட்டிருக்கே..? என்று கேட்பார்கள். அது ரஜினி ஸ்டைலில் நான் கொடுத்த போஸ் என்பது யாருக்குமே புரிவதில்லை. ரசிகன் என்ற நிலையில் இருந்து தொண்டன் என்ற நிலைக்கு நான் உயர்ந்தது தளபதி ரிலீஸ் போதுதான். அப்போது காவிரி பிரச்னையில் ரஜினி வாய்ஸ் (அனேகமாக ரஜினியின் முதல் வாய்ஸ்!) கொடுத்திருந்தார். நண்பர்கள் ஒன்றுகூடி போஸ்டர் அடிப்பது என்று முடிவு செய்து என்ன வாசகம் போடலாம் என்று மண்டையை உடைத்து கடைசியில் கொட்டை எழுத்துகளில் காத்திருக்கிறோம் கர்நாடகா செல்ல... என்று போட்டு கீழே மன்னனின் தளபதிகள் என்று மட்டும் போட்டோம். அந்த போஸ்டர் எங்களை கவனிக்க வைத்தது.
அண்ணாமலை ரிலீஸ் அன்று பத்து ரூபாய் டிக்கெட்டை ஒரு ரசிகர் 356 ரூபாயும் (அவருடைய மொத்த கையிருப்பு) ஒரு முழுக்கை பாலியெஸ்டர் சட்டையும் கொடுத்து வாங்கியபோது உண்மையிலேயே அதிர்ந்து போனேன். ரசிகர்களின் வெறித்தனமான மனோபாவம் எனக்கு அப்போதுதான் தெரிந்தது. ரஜினியின் பெயரால் ரத்ததானம் செய்யும் இயக்கத்தில் மட்டும் இருப்பது... சினிமாவை எல்லாம் ஒரு வாரம் கழித்து பார்த்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தேன். அதன்பிறகு ரத்ததானம் என்பது யார் பெயராலும் செய்ய வேண்டியதில்லை என்றும் முடிவு செய்துகொண்டேன். ஆனாலும் நான் ரஜினி ரசிகந்தான்!
வீட்டுக்குள் வெட்டு குத்து அளவுக்கு போகாவிட்டாலும் எனக்கும் அண்ணனுக்கும் யார் பெரியவர் (அதாவது யார் பெரியவர் ரஜினியா... கமலா..!) என்ற மோதல் அவ்வப்போது வெடிக்கும். எங்கள் அணிக்கு வலு சேர்ப்பதற்காக அம்மாவை இழுப்போம். நீங்க சொல்லுங்கம்மா... உங்களுக்கு யார் பிடிக்கும்..? என் அம்மா நிதானமாகச் சொல்வார். ‘எனக்கு விஜயகாந்த் புடிக்கும்...’ என்று. ஏன்மா என்றால், ‘பாவம்டா... நாம கறுப்புனு காம்ப்ளெக்ஸ் இல்லாம நடிக்குது... யாராச்சும் ரசிகனா இருக்க வேண்டாமா என்பார். பின்னாளில் விஜயகாந்த் அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்தியபோது அம்மா அவருடைய ரசிகர்களின் எண்ணிக்கையைப் பார்த்து மிரண்டு போனார்.
எல்லா இளம் பெண்களையும் போலவே என் தங்கை கார்த்திக் ரசிகை. ‘அப்படி என்னதான் இருக்கு அந்தாளுகிட்டே..?’ என்றால் சிரிப்பு... என்பாள். அதற்காக கார்த்திக் படங்கள் என்றால் ஓடி ஓடி பார்க்கிறவள் இல்லை. எப்போதாவது படம் போகலாம் என்று வந்தால் அது கார்த்திக் படமாக இருந்தால் சந்தோஷமாக வருவாள். கோபுரவாசலிலே படமெல்லாம் பார்த்தபோது எனக்கே எங்கே கட்சி மாறிவிடுவேனோ என்ற எண்ணம் எழுந்தது.
என் தங்கைக்கு திருமணம் முடிந்து கொஞ்சநாளில் வீட்டுக்கு வந்திருந்தாள் அத்தானோடு! அம்மா ரெண்டுபேரையும் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போ என்றார்கள். நானோ அவங்க போயிட்டு வரட்டும் என்று சொல்லி டிக்கெட்டுக்கு மட்டும் சொல்லி வைத்தேன். என் தங்கைக்கு பிடித்த கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித் தா படம்..! டிக்கெட்டுக்குச் சொன்ன பிறகு ஒரு சந்தேகம். ஒருவேளை கல்யாணமான பிறகு கார்த்திக்கைப் பிடிக்கும் என்று சொன்னால் அத்தான் என்ன நினைப்பாரோ என்று. அத்தானை மெதுவாக அணுகி சொன்னேன். அத்தான்... சினிமாவுக்கு போயிட்டு வாங்க... உள்ளத்தை அள்ளித்தா படம்... தங்கச்சிக்கு கார்த்திக்னா உசுரு... என்று!
அத்தான் முகம் மலர்ந்தார். சூப்பர்... எனக்கு ரம்பான்னா ரொம்பப் பிடிக்கும்!

No comments: