Wednesday, June 12, 2013

மற்றும் பலர்!


யார் எப்போ, ‘சோறு வை’னு சொன்னாலும் எனக்கு கோமதி அக்காவின் ஞாபகம் வந்துவிடும். எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டு முன்னால் இருந்த குடிசைச் சாய்ப்புக்கு கோமதி அக்கா குடிவந்த நாள் எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.
இருந்த பத்து பாத்திரங்களையும் பளிச்சென்று விளக்கி கழுவி வீட்டை மெழுகி பெரிய கோலமெல்லாம் போட்டு வைத்திருந்தாள் கோமதி அக்கா. என் அம்மா, பக்கத்து வீட்டு ஆச்சி எல்லாரும் பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டதும் சூடாக கொஞ்சம் பால் கொண்டு வந்து கொடுத்தாள். முத்தத்தை ஒட்டி ஒரு அடுக்களை, அதுல இருந்து உள்ளே போனா ஒரு ரூம்னு இருந்த அந்த குடிசை சாய்ப்புக்கு திரைச் சீலை எல்லாம் போட்டிருந்தாள்.
‘அவ பெரிய கைவேலைக் காரியா இருக்கால… அவ வீட்டுல தொங்குத திரைச் சீல, சுவத்துல மாட்டியிருக்க அலங்காரம் எல்லாம் அவளே தைச்சாளாம். எம்புட்டு அளகா இருக்கு… நம்ம ஊரு தேடி வந்துருக்குதுக… நல்லாயிருக்கட்டும்…’ என்று அம்மா ஆசீர்வதித்தாள்.
அந்த ஆசீர்வாதம் சாயங்காலமே சாயம்போய்விட்டது. கோமதி அக்காவின் வீட்டுக்காரர் முழு போதையில் வந்தார். பழகுன மாட்டை வண்டியில் பூட்டுனா அதுவே வீடு வந்து சேர்ந்துடும்னு சொல்ற மாதிரி அந்த மாமாவின் சைக்கிள் அவரை வீட்டுக்கு இழுத்துக் கொண்டு வந்தது. சைக்கிள் கேரியரில் கட்டப்பட்டிருந்த ஐஸ் பெட்டியை அப்படியே இறக்கி வைத்த மாமா உரத்த குரலில் சொன்னார். ‘கோமதி சோறு வை!’
‘ஒரு வீட்டுக்குக் குடித்தனம் வந்து முதல் நாள் வீட்டு ஆம்பள இப்படி வந்தா என்னனு சொல்ல… போ… உன் தலையில ஈசன் எழுதுன எழுத்து அம்புட்டுதான்…’ என்றாள் பக்கத்து வீட்டு ஆச்சி. ‘இல்ல ஆச்சி… எப்பமும் குடிக்க மாட்டாரு… இன்னிக்கு யாரோ இழுத்துட்டுப் போயிருக்காங்க. அவரு நல்லவருதான்…’ என்று சமாதானம் சொன்னாள் கோமதி அக்கா.
கோமதி அக்கா தன் வீட்டுக்காரரை அவரு இவருனு சொன்னதே எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. எனக்குத் தெரிஞ்சு வீட்டுக்காரரை அவுகனு சொல்றதுதான் மரியாதை. அவருனு சொன்னா அவமரியாதை. ‘அது படிச்ச புள்ளைல… அதுக்குத் தெரியாத மரியாதையா… எல்லாம் போதும்… போ… உன் சோலியப் பாரு’ என்று தலையில் குட்டினாள் அம்மா.
கோமதி அக்காவின் வீடு அத்தனை சுத்தமாக இருக்கும். பொட்டுப் பொடுசுகளாக ரெண்டு பிள்ளைகள் இருந்தாலும் வீட்டில் குப்பையாக இருந்ததே இல்லை. தினமும் மெழுகி, துடைத்து, ஒட்டடை அடித்து சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தாள். வீட்டு வாசலில் கனகாம்பரமும் டிசம்பர் பூவும் செடி வாங்கி நட்டு வைத்தாள்.
அந்த மாமாவுக்கு ஐஸ் வியாபாரம். எங்கள் ஊரில் ஐஸ் கம்பெனிகாரர் ஒருவர் இருந்தார். அவர் கம்பெனியில் ஐஸ் எடுத்து ஊர் ஊராக விற்கும் வேலை மாமாவுக்கு. சுற்று வட்டாரங்களில் வியாபாரம் செய்தால் மூணு மணிவாக்கில் வீட்டுக்கு வந்துவிடுவார். சைக்கிளை விட்டு இறங்கும்போதே, ‘கோமதி… சோறு வை! பசி தீபிடிக்கி…’ என்றபடிதான் இறங்குவார்.
எப்படியும் சாயங்காலம்தானே வருவார் என்ற நம்பிக்கையில் அப்போதுதான் அக்கா உலையே வைத்திருப்பாள். ஆனாலும் கையில் வைத்திருக்கும் ராணியையோ தேவியையோ அப்படியே மடித்து வைத்துவிட்டு, ‘கைகால் கழுவிட்டு வாங்க…’ என்பாள்.
‘யக்கா… என்ன தைரியத்துல மாமாவை சாப்பிடக் கூப்பிடுத… சடார்னு வந்து உக்காந்துடாவன்னா என்ன செய்வ… உலைத் தண்ணிய எடுத்து ஊத்திக் குடுப்பியா… சோறு ரெடியாவலைனு சொல்ல வேண்டியதுதானே…’ என்றால் சிரிப்பாள். அதற்குள் மாமா அடுத்து ஒருமுறை சோறு வை என்றிருப்பார்.
மாமாவின் குணம் அவளுக்குத் தெரியும். சில முறை பார்த்தபிறகு எனக்கும் தெரிந்துவிட்டது. வண்டிய விட்டு இறங்கியதும் பின்பக்கம் போய் வருவார். பிறகு வண்டியில் இருந்து ஐஸ் பெட்டியை இறக்கி ஆச்சி வீட்டு திண்ணையில் வைப்பார். பிறகு அதில் மிச்சமிருக்கும் ஐஸ் எத்தனை என்று சின்னதாக ஒரு கணக்கெடுப்பார்.  பிறகு ஐஸ் பெட்டி மீது ஈரத் துணியைப் போட்டு வைப்பார். அதன்பிறகு சைக்கிளை நிழலில் கொண்டு போய் நிறுத்தி துணியை எடுத்து வண்டியைத் துடைப்பார். அதையும் முடித்து விட்டு வந்து கைகால் முகமெல்லாம் கழுவி விட்டு வந்து பிள்ளைகளுக்கு அருகே படுத்து உறங்கும் குழந்தைகளைக் கொஞ்சுவார். இந்த இடைவெளியில் பத்து தடவையாவது சோறு வை என்பதையும் சொல்வார்.
இந்த அரைமணியில் அக்கா சோறு பொங்கி ரசமோ புளித்தண்ணியோ தாளித்து கடலைத் துவையலும் அரைத்துவிடுவாள். அனேகமாக துவையலை அரைத்து வழிக்கும்போது வந்து உட்காருவார். சாப்பிட்டு விட்டுப் போனாரென்றால் பள்ளிக்கூடம் விடும் நேரத்தில் வியாபாரம் பார்த்துவிட்டு கம்பெனிக்கு போய் கணக்கு கொடுத்துவிட்டு வருவார், செட் சேர்ந்தால் ஆடிக் கொண்டே!
அக்காவின் பகல் பொழுதுகளெல்லாம் அம்மாவுக்கும் பக்கத்து விட்டு ஆச்சிக்கும் பொறாமைதரக் கூடிய பொழுதுகளாக இருக்கும். காலையில் குளித்து துவைத்து மாமாவுக்கு சாப்பாடு போட்டு அனுப்பிவிட்டாளென்றால் அதன்பிறகு அவளுக்கு வேலை கிடையாது. அவள் பிள்ளைகள் இரண்டும் அப்படியொரு சமத்து. ரெண்டு கரண்டியை எடுத்து முன்னே போட்டால் அதை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். அக்கா புத்தகம் படிப்பாள், பூ தொடுப்பாள், திரைச் சீலையில் குயில் கிளி எல்லாம் பின்னுவாள்.
உன் புருசன் உன்னை மடியில வெச்சுல்லா தாங்குதான்… உனக்கு என்னத்தா குறை… என்று அடிக்கடி அங்கலாய்ப்பாள் பக்கத்து விட்டு ஆச்சி. இந்த மனுசனுக்கு மிலிட்டரி மென்சன் வருது… ஆனா, இன்னும் என்னை பீடி சுத்து பீடி சுத்துனு போட்டு படுத்தி எடுக்காரு. கேட்டா உன் காப்பிச் செலவுக்காவது ஆவும்லாட்டினு வக்கணையா பேசுதாரு. இவரு குடிக்க பீடிச் செலவை மிச்சம் புடிக்க என்னை பீடி சுத்தச் சொல்தாரு…’ என்று ஆச்சி சொல்லும்போது கோமதி அக்கா முகம் பெருமையில் மின்னும்.
அன்றாடங்காய்ச்சி வேலைதான் என்றாலும் ஞாயித்துக் கிழமைகளில் மாமா ஐஸ் வியாபாரத்துக்குப் போகமாட்டார். பள்ளிக்கூடம் லீவு என்பதால் பெரிய அளவில் வியாபாரம் இருக்காது. தெருத்தெருவாகச் சுத்த வேண்டும் என்றாலும் பள்ளிக்கூட வியாபாரம் போல கிடைக்காது என்பதால் அன்று ஐஸ் எடுக்க மாட்டார். அன்றைக்கு கோமதி அக்காவின் பிள்ளைகள் எங்க வீட்டில்தான் கிடக்கும்.
மறுநாள் மாமா வியாபாரத்துக்குப் போன பிறகு ஆச்சி கிண்டலாகச் சொல்வாள். ‘ஏட்டி… நீ திரைச்சீலை போடுற ரகசியம் இன்னைக்குல்லா எனக்குத் தெரிஞ்சுது. பகலை ராத்திரியாக்கி பவுசு கொண்டாடுதியாக்கும்…’ என்பாள். கோமதி அக்காவுக்கு முகம் கூடுதலாகச் சிவக்கும்.
மாமா கொண்டு வரும் காசில் கொஞ்சம் மிச்சம் பிடித்து ஊருக்கு வெளியே ஒரு துண்டு நிலம் வாங்கிப் போட்டாள். குச்சுலோ குடிசையோ சொந்த நிலத்துல கட்டிரு ஆத்தா… அதுதான் உனக்கு பெருமை என்று ஆச்சி உசுப்பேத்தி விட, அக்கா இன்னும் வேகமாக காசு சேர்க்கத் தொடங்கினாள்.
‘ஆச்சி… பீடி சுத்தறது எப்படினு எனக்குச் சொல்லித் தர்றீங்களா..?’ என்று கோமதி அக்கா கேட்டபோது ஆச்சி கொஞ்சம் அசந்து போனாள். ‘அவன் உன்னை ராசாத்தி மாதிரி வெச்சிருக்கான்… நீ ஏன் இந்த போயிலைக்குள்ளே மூஞ்சியைக் குடுக்கணும்னு பாக்கே… வேண்டாம் தாயி…’ என்றாள். ‘இல்லே ஆச்சி… சும்மா ஆசைக்கு…’ என்றாள்.
ஆஸ் வெச்சு அளவெடுத்து பேப்பரில் வெட்டி உமியை வைத்துச் சுருட்டி முதல் நாள் பேப்பர் பீடி சுற்றிப் பார்த்த கோமதி அக்கா ஒரே வாரத்தில் பீடி இலையில் புகையிலை வைத்து பீடி சுற்ற கற்றுக் கொண்டு விட்டாள்.
வீட்டில் பேப்பரில் சுற்றிய பீடிக் கட்டு கிடப்பதைப் பார்த்த மாமா கோமதி அக்காவை திட்டித் தீர்த்துவிட்டார். ‘இந்தச் சோலியை இன்னையோட விட்ரு… இந்த புகையிலை வாசனை புள்ளைகளை சீக்காளி ஆக்கிரும்… உன்னையும் உருக்கிரும்… நமக்கு வேண்டாம் இந்தப் பொழப்பு…’ என்று கோபித்துக் கொண்ட மாமா, ‘இனி குடிப்பதில்லை… அதுக்காகற செலவையும் நிறுத்திக்கறேன்…’ என்றபோது அக்கா அழுதே விட்டாள். ஆனாலும் பீடி சுற்றும் லாவகமும் அதில் கிடைக்கும் லாபமும் அவளை இழுத்தது. ‘ஆச்சி… உங்க கணக்குல கூடுதலா நூறு தூள் வாங்கிட்டு வாங்க… நான் தனி கட்டு போட்டுத் தாரேன்… கடைக்காரன் என்ன சொல்லுதான்னு பார்ப்போம்…’ என்றாள்.
பீடிக் கடையில் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமென்றால் அதுதான் வழி! பீடி சுற்ற ஆசைப்படுபவர்கள் முதலில் ஏற்கனவே சுற்றுபவர்களிடம் சில பீடிகளைச் சுற்றிக் கொடுப்பார்கள். அதை தங்கள் கட்டுகளில் வைத்து கடையில் கொடுப்பார்கள். கடைக்காரன் பீடி தரம் பார்க்கும்போது புதிதாகச் சுற்றியவர்களின் பீடியை உருவி எடுக்காவிட்டால் முதல் கட்டம் பாஸ்.
அடுத்து புதிதாக சுற்றுபவர்கள் தனி கட்டாக ஒரு கட்டு சுற்றிக் கொடுப்பார்கள். அதுவும் ஓகே ஆனால் பழைய ஆளின் கணக்கில் தூள் இலை கொடுப்பார்கள். அதுவும் ஓகே ஆனால் தனி அட்டை போட்டுக் கொடுப்பார்கள். கோமதி அக்கா அந்த இடத்தில் இருந்தாள்.
‘உன் மாப்பிள்ளை இம்புட்டு தூரம் சொல்லியிருக்கான்… நீ பீடி சுத்தணும்னு சொல்லுதியே… உன் ஆசைக்குதான் என் இலை தூள்ல சுத்திட்டியே… பிறகு ஏம்ட்டி இந்த புடிவாதம்…’ என்று ஆச்சி தயங்க, ‘உன் வீட்டுல வெச்சு சுத்திக் குடுத்தா அவரு ஒண்ணும் சொல்ல மாட்டாரு. அவருக்கு தன் புள்ளைகளுக்கு ஏதும் ஆகிடுமோனுதான் பயம்… கூட நாலு காசு வந்தா எங்களுக்கு நல்லதுதானே…’ என்றாள். ஆச்சியால் அதன்பிறகு மறுக்க முடியவில்லை.
ஆச்சி வாங்கிக் கொடுத்த இலை தூளில் பீடி சுற்றி கட்டு போட்டு ஆச்சியிடமே கொடுத்தாள். ‘நீயும் கடைக்கு வா… அப்பதானே அவன் சொல்லுத குத்தம் குறை உனக்கும் தெரியும். நல்லாயிருக்குனு சொல்லிட்டாம்னா இன்னைக்கே தனி அட்டை போட்டுறலாம்ல…’ என்று ஆச்சி கூப்பிட, ‘அவரு வந்ததும் சோறு வைனு நிப்பாரு… சோத்தை வடிச்சுட்டு வந்துறட்டுமா…’ என்ற கோமதி அக்கா பரபரவென்று சோற்றை வடித்துவிட்டு ஆச்சியோடு புறப்பட்டாள்.
கோமதி அக்காவின் பீடி சுற்றும் திறமையை கடைக்காரன் பாராட்டித் தள்ளிவிட்டான். ‘கல்லு மாதிரி சுத்தியிருக்கியே தாயி… ஒரு நாளைக்கு ஐநூறு தூள் கூட சுத்துவ போல இருக்கே… ஆச்சி… நீ கொஞ்சம் இந்த பிள்ளைகிட்டே கத்துக்கோ… பாதிக்கு பாதி கழியுது…’ என்ற கடைக்காரர் கோமதி அக்காவுக்கு தனி அட்டை போட்டுக் கொடுத்துவிட்டார்.
‘ஐநூறு தூள் சுத்துனா உன் புருஷன் ஐஸ் விக்கவே போ வேணாம்… அவனை உக்கார வெச்சு நீ சோறு போடலாம்… இன்னைக்கு நூறு தூள் மட்டும் வாங்கு… ஆனா, உன் புருஷன்கிட்டே சொல்லிட்டு செய்…’ என்று ஆச்சி ஆலோசனை சொல்லி இலை தூள் வாங்கிக் கொடுத்துவிட்டாள்.
அந்த இலை தூளோடு கோமதி அக்கா வீட்டுக்கு வந்த அன்றுதான் மாமா மீது ஒரு லாரி இடித்து மாமா ஸ்பாட்டிலேயே இறந்து போனார். அக்காவை பீடித் தட்டும் கையுமாகப் பார்க்க மாமாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கோமதி அக்காவை அந்த பீடி சுற்றும் வேலைதான் காப்பாற்றியது. வாங்கிப் போட்ட மனையில் வீடு கட்டி விட்டாள். மகளைக் கட்டிக் கொடுத்துவிட்டாள். மகனுக்கு கல்யாணம் முடித்துவிட்டாள்.
இப்போது பேரன் சொல்கிறான், ‘கோமதி சோறு வை’ என்று… அதே அதிகாரத்தோடு! கோமதி அக்கா பீடி சுற்றுவதை விட்டுவிட்டாள்.

No comments: