Thursday, February 8, 2024

ரேடியோ ஆச்சி!

ஔவையார் என்று சொன்னாலே நமக்கு வயதான உருவம்தான் நினைவுக்கு வரும்… சும்மா ஆசைக்குப் பார்ப்பதற்குக் கூட ஔவையாரின் இளம்பருவத்து படம் என்று எதுவுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எதற்கு ஔவையார் ரெபரன்ஸ் என்றால் எங்க வீட்டுக்கு மேல்பக்கம் குடியிருந்த திருவாய் ஆச்சியைச் சொல்ல எனக்கு வேறு எதுவும் இல்லை! நான் முதன்முதலில் பார்த்த நாள் முதலாக ஒரே தோற்றத்தில் அதுவும் தளர்ந்த முதிய தோற்றத்தில் இருந்தாள் திருவாய் ஆச்சி!

வீட்டின் மேல்பக்கம் தெருவை ஒட்டி ஒரு செம்பருத்திச் செடி… பேர்தான் செடி… ஆனால், மரம் போல அடர்ந்து நிற்கும். ஒருநாளில் ஐநூறு பூ பூக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு சிவப்பும் பச்சையும் சரிசமமாகத் தெரியும். அதைத் தாண்டி வந்தால் நிஜமான மரம் போல வளர்ந்து நிற்கும் நந்தியாவட்டை. அப்படியே பனியைக் கொட்டியது போல நந்தியாவட்டை பூத்துக் கிடக்கும்.

அந்த நந்தியாவட்டை, செம்பருத்தி பூக்களோடு சேர்த்து ஆற்றோரம் இருந்து பறித்துக் கொண்டு வரும் நொச்சி இலைகளையும் பச்சையாக வைத்து சிவப்பு வெள்ளை பச்சை என்ற வரிசையில் விளக்குச் சரம் கட்டுவாள் திருவாய் ஆச்சி!

வீடுகளுக்கு விளக்குச் சரம் கட்டிப் போடுவதும் அதற்கான கூலியாக நெல் வாங்கிக் கொள்வதுமான வாழ்க்கை அவளுடையது. பிள்ளைகளில் கடைக்குட்டியான பாலையாவின் குடும்பம் அந்த வீட்டில் இருக்க, அவர்களோடுதான் இருந்தாள். பாலையா தாத்தா (ஆச்சியின் கடைக்குட்டி மகனே எனக்கு தாத்தா என்றால் ஆச்சியின் வயதை நினைத்துப் பாருங்க!) ஜெயராம் பஸ் சர்வீஸில் டிரைவராக இருந்தார். அவர் மனைவி பகவதி ஆச்சி பீடி சுற்றுவார். அவர்களின் பிள்ளைகள்தான் திருவாய் ஆச்சிக்கு உதவி!

குறிப்பாக பாலையா தாத்தாவின் நடுள்ள மகன் துரையின் உதவி பேருதவி. அவன் (என்னைவிட இளையவன்) தான் ஆற்றுக்குப் போய் நொச்சி இலைகளைப் பறித்து வருவான், நந்தியாவட்டை மரத்தில் ஏறி குடலை நிறைய பூப்பறிப்பான். சாயங்கால நேரத்தில் சைக்கிளில் குரங்கு பெடல் அடித்துக் கொண்டே போய் வீட்டு வீட்டுக்கு சரங்களைப் போட்டுவிட்டு வருவான். ஆச்சிக்கு உதவியாக இருந்தாலும் சுற்றியிருக்கும் நமக்கெல்லாம் உபத்திரவமாக இருக்கும் ஒரு விஷயம் அவனுடைய பாட்டுதான்! நந்தியாவட்டை மரத்தில் நிறு பூப்பறிக்கும் நேரத்தில் பாட்டு முழங்கிக் கொண்டே இருக்கும். கட்டைக் குரலில் கர்ண கொடூரமான முறையில் கவலையே படாமல் பாட்டு படித்துக் கொண்டிருப்பான்.

அவன் பள்ளிக்கூடம் செல்லும் வரையில் அவன் பாட்டைக் கேட்கும் ஆச்சி, அதன் பிறகு ரேடியோவை ஆன் பண்ணுவாள். இந்த சேனல், இன்ன நிகழ்ச்சி என்ற வரையறை எல்லாம் கிடையாது. ஏதோ ராகம் ஏதோ தாளம் என்று அதுபாட்டுக்கு பாடிக் கொண்டே இருக்கும்.

இசை, பாடல்கள், வயலும் வாழ்வும் செய்திகள் என்று எல்லாமும் முடிந்த பிறகும் இந்தியிலோ ஆங்கிலத்திலோ ஏதாவது குரலில் பேசிக் கொண்டிருக்கும் அந்த ரேடியோ. பகவதி ஆச்சி பீடி சுற்ற பக்கத்து வீடுகளுக்குச் சென்று விடுவார். திருவாய் ஆச்சி மட்டும்தான் வீட்டில் என்பதால் ரேடியோ துணைக்கு இருக்கும்.

ஆச்சியும் அப்படித்தான் சொல்வாள். என்ன படிக்குனு எல்லாம் தெரியாது… அது படிச்சுகிட்டு இருந்தா வீட்டுல ஒரு ஆள் தொண இருக்க மாரி இருக்கும்… எனக்கும் மலைவு தெரியாது என்பாள். அது கூடவே அவள் சொல்லும் இன்னொரு விஷயம், ஆள் இருக்க மாரி இருந்தாலும் ஊர்க்காரப் பயலுவள மாரி அது பொரணி பேசாது என்பதுதான்! அவளும் யாரைப் பற்றியும் பேசமாட்டாள், அவளிடமும் யாரும் யாரைப் பற்றியும் பேச  முடியாது.

மாலை நேரங்களில் வீட்டுக்குப் போனால் கடிச்சாந் தண்ணி குடிக்கியா பாபு என்பாள். தேயிலைத் தூளைப் போட்டு கொதிக்க வைத்து தம்ளரில் ஊற்றிக் கொடுப்பாள், கூடவே கையில் ஒரு கருப்பட்டித் துண்டும். தேநீரை ஒரு மடக்கு குடித்துக் கொண்டு கருப்பட்டியை ஒரு கடி கடித்துக் கொள்ள வேண்டும். அதுதான் கடிச்சாந் தண்ணி! ஒவ்வொரு மடக்குக்கும் சுவை மாறிக் கொண்டே இருக்கும் அந்த தேநீர்!

அதேபோல, டீ தண்ணிக்குள் முறுக்கு, காரா சேவு போன்றவற்றை உடைத்துப் போட்டுச் சாப்பிட்ட பழக்கம் கொண்ட எனக்கு, முதன் முதலில் சோளப் பொரியையும் அது போலவே போட்டுத் திங்கலாம், குடிக்கலாம் என்று கற்றுக் கொடுத்தவள் அவள்தான்!

முதுகுப் பக்கம் சாய்ந்து கொள்ள தலையணை, காலை நீட்டிக் கொள்ள ஒரு சாக்குப் பை… ஒருபக்கம் குவிந்து கிடக்கும் நந்தியாவட்டை, செம்பருத்தி பூக்கள், இன்னொருபக்கம் தண்ணீர் இருக்கும் கிண்ணத்துக்குள் கிடக்கும் வாழைநார் கயிறு! இரண்டையும் இழுத்து இழுத்து சரம் தொடுத்துக் கொண்டே இருக்கும் அவள் கை!

எங்கள் வீட்டு சன்னலும் அவள் வீட்டு முற்றமும் அருகருகே இருக்கும். இங்கிருந்து ஏச்சி என்று குரல் கொடுத்தால் அங்கிருந்து என்ன பாபு என்று பதில் சொல்லுவாள். அளிப் பாய்ச்சிய திண்ணையின் ஊடாக அவள் அமர்ந்திருப்பது தெரியும்.

ஒருநாளில் ஆச்சி வீட்டுக்கு வெளியே இருக்கும் மாப்பிள்ளைத் திண்ணையில் அமர்ந்து பாலையா டிரைவர் தாத்தா எதையோ ரிப்பே பார்த்துக் கொண்டிருந்தார். எட்டிப் பார்த்தால் அது ஆச்சியோடு பேச்சுத் துணையாக இருக்கும் ரேடியோ! ஒங்க தாத்தா ஒக்கிட்டுட்டான்… அவனே ஒக்கிட்டுத் தாரேம்னு சொல்லியிருக்கான்… பாப்போம் என்றாள்.

ஆச்சியின் மூத்த பிள்ளைகள் வேலைகளில் இருந்தார்கள். கொஞ்சம் வசதியாகவும் இருந்தார்கள். ஆனால், கடைக்குட்டி கொஞ்சம் கஷ்டப்படுகிறான்.. நான் இங்கிருந்தால் அவனுக்கு உதவியாக இருக்கும் என்று சொல்லி கடைசி வரையில் இங்கேயே இருந்துவிட்டாள்.

அவள் காலத்துக்குப் பிறகு அந்த செம்பருத்திச் செடி, நந்தியாவட்டை எல்லாம் எடுபட்டு விட்டது. ஆச்சியின் வீடு நடுள்ள மகன் மற்றவர்களுக்கு பணம் கொடுத்து வாங்கி விட்டார். கொஞ்சகாலத்தில் அவரும் வேறு ஒருவருக்கு விற்றுவிட, இப்போது ஜன்னலையே மறைத்துக் கொண்டு நிற்கிறது பெரும் சுவர். அந்தச் சுவருக்கும் அப்பால் ஏதேதோ மனித குரல்கள் கேட்டாலும் அந்த ஜீவனுள்ள ரேடியோ குரல் கேட்பதே இல்லை!

அதுசரி, அந்த ரேடியோ ஆளின் பேச்சுத் துணையைத் தேடும் திருவாய் ஆச்சிதான் அங்கில்லையே!

No comments: