Monday, July 1, 2013

இனி இது கொட்டாகுளம்!



‘ஏல… கீழக் கொளத்து வழியாப் போன பதுனமாப் போங்கல… குளம் கழுத்து வரைக்கும் தண்ணி கெடக்கு…’ நாங்கள் பள்ளிக்கூடம் போகையிலே பெரியாளுக சொல்லி அனுப்புத வார்த்தைகள். எங்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் அஞ்சாப்பு வரைக்கும்தான். அதுக்கு மேலே ஆறாப்பு போணும்னா நாங்க இலஞ்சிக்குதான் போணும். இலஞ்சிக்கு ரோடு சுத்தியும் போலாம்… கீழக் குளத்துக் கரை வழியாவும் போலாம். எங்க தெரு பிள்ளைகளுக்கு கீழக் கொளத்து கரைதான் கிட்டத்துல… அதனால நாங்க கீழக் கொளத்து கரை வழியாத்தான் போவோம்!
எங்க தெருவுல இருந்து பத்துப் பன்னெண்டு பயலுவ ஒண்ணாப் போவோம். அதுல கீழக் கடைசிவீட்டு பேச்சி சும்மா வரமாட்டான். (அனேகமா எங்க தெருவுல வீட்டுக்கு ஒரு பேச்சி இருக்கறதால எல்லாத்துக்கும் ஒரு அடைமொழி உண்டு) ஓரக்கண்ணுல குளத்தாங்கரையை பாத்துகிட்டே வருவான். கையிலே சுருக்கு போட்ட தென்ன ஓல வெச்சிருப்பான். கரையில் பொந்துக்குள்ள இருந்து தலைய மட்டும் நீட்டி பாக்கற தண்ணிப் பாம்புதான் அவன் குறி. சரக்குனு சுருக்கைப் போட்டு படக்குனு புடிச்சுருவான்.
கையிலே ரெடியா பட்டணம் பொடி டப்பா வெச்சிருப்பான். (எங்க காலத்துல பென்சில், குச்சி எல்லாம் போட்டு வைக்கதுக்கு பட்டணம் பொடி டப்பாதான் உண்டு. அதுதான் பென்சில் பாக்ஸ்) அந்த டப்பாவுல கீழ லேசா ரெண்டு மூணு ஓட்டை போட்டு வெச்சிருப்பான். பாம்புக்கு மூச்சு விடுததுக்கு எடம் வேணும்லா என்பது அவன் லாஜிக். பாம்பைக் கொண்டாந்து கிளாஸ்ல காட்டுறது அவனோட வீரச் செயல்கள்ல ஒண்ணு!
திடீர்னு ஒரு மூடு வந்தா அப்படியே டவுசர் சட்டைய கழற்றி கரைல போட்டுட்டு எல்லாரும் குளத்துல குதிச்சிருவாங்க. அதுலயும் நடு மடைல இருந்து குத்துக்கல் வரைக்கும் போய் தொட்டுட்டு வாரவந்தான் ஜெயிச்சான்னு ரூல்ஸ். எல்லாரும் போட்டி போட்டு நீச்சல் அடிப்பாங்க. லீவு நாளுன்னா நீச்சல் ரொம்பநேரம் நடக்கும்.
கீழக் கொளத்துல கொட்டாளத்து பத்து வயல்களுக்கு மட்டும் மூணு மடை உண்டு. பாலத்து பக்கத்துல மொத மடை இருக்கும். அடுத்து கிழக்க வந்த மடைனு ஒண்ணு உண்டு. மூணாவதா நடு மடை. அதுக்கு அங்கிட்டு இலஞ்சி பத்து வயல்களுக்காக ரெண்டு மூணு மடைகள் உண்டு. இதுல நடுமடைங்கறதுதான் குளிக்கதுக்கு தோதான இடம். என்ன தோதுன்னா அம்மாமாருங்க தேடி வரமாட்டாங்க. ஏன்ன கீழக் கொளத்து கரைதான் ஆம்பளைகளுக்கான டாய்லட்! அதுனாலேயே நடுமடைல குளிக்கப் போவாங்க பொடிப் பயலுக!
கொளத்துக் கரையிலே கொல்லைக்கு போனாலும் கழுவறதுக்கு மடை பக்கம்தான் இறங்கணும். நாம குளிக்க குளத்த நாமளே அசிங்கம் பண்ணலாமானு ஒரு விஷயத்தை எல்லாப் பயலுவளுமே கடைபிடிச்சாங்க.
கரெக்டா பள்ளிக்கூடம் திறக்க காலத்துல கண்ணுப்புளி மெட்டு அணையையும் தொறந்துருவாங்க. அங்க இருந்து வாய்க்கா வழியா தண்ணி வந்து மேலக் கொளம் நிறைஞ்சு அப்படியே கீழக் கொளத்துக்கு வந்து அங்க இருந்து வழிஞ்சு ஓடி குண்டாத்துக்குப் போகும். பள்ளிக்கூடம் தொறக்கற சமயம்தான் எங்க ஊருல குற்றாலம் சீசன்கறதால கரையெல்லாம் சேறாத்தான் இருக்கும். ஆனாலும் ஒருத்தர் கையை ஒருத்தர் புடிச்சுகிட்டு கரை வழியாத்தான் போவோம்.
கீழக் கொளத்து பாசனங்கறது நம்பிக்கையான பாசனம். நாளைக் குறிச்சு நாத்து பாவலாம். நாள் குறிச்சு நடவு போடலாம். எப்பவும் குளத்துல தண்ணிக்கு பஞ்சமிருக்காது. குளத்தோட அடிமட்டமும் வயலோட மட்டமும் ஒண்ணா இருக்கதால எந்நேரமும் வயல்ல ஈரம் பாவித்தான் கிடக்கும். தண்ணி திறக்க முடியாம சிக்கல் வருதுன்னா அது மடைல தேங்காய் அது இதுனு ஏதும் அடைச்சிருந்தா மட்டும்தான். அதுக்கும் கொல்லங்கொண்டான்னு ஒரு ஆள் உண்டு.
எந்த மடை அடைச்சிருக்கு… முத மடையா… நடுமடையா…’னு கேட்டுகிட்டே வர்ற கொல்லங்கொண்டான் எந்த மடையைச் சொன்னாலும் வேட்டியை அவுத்து வெச்சுட்டு கோமணத்தோடதான் இறங்குவாரு. (அந்தக் காலத்துல அவன்னுதான் சொல்லியிருக்கோம்.) கிட்டத்தட்ட பத்து அடி அகலமுள்ள கரை… சின்னதா ஒரு ஆள் சிரமப்பட்டு போற அளவுக்கான மடை… பத்து நிமிஷம் மூச்சை அடக்கி மடைக்குள்ளே கிடக்க மண்டியை எல்லாம் வழிச்சு வெளில தள்ளி மடையைத் தூர் அள்ளிட்டு அங்கிட்டு வருவாரு கொல்லங்கொண்டான்.
புகார் சொல்லுத ஆளுகிட்டே காசெல்லாம் கேட்ட மாட்டாரு. அதிகபட்சமாப் போனா ஒரு டீ வாங்கிக் குடிப்பாரு. ஆனா. கொளத்துப் பொறவுல இருக்கற வயல்கள்ல அறுப்பு நடக்கையிலே சாங்காலமா களத்துக்கு வந்து நெல்லு வாங்கிட்டுப் போவாரு. அதுதான் கூலி! எங்க வீட்டு வயல் அறுப்பு சமயத்துல ‘சின்னய்யா கையால போடச் சொல்லுங்க… செழிக்கச் செழிக்க எனக்கு பெருகும்’னு என் கையால வாங்கிட்டுப் போவாரு! எங்க கல்லூரிப் படிப்பை சமாளிக்கறதுக்காக கீழக் கொளத்து பொறவுல இருந்த நாற்பது செண்ட் அளவுள்ள எங்க வயலை சில ஆயிரங்களுக்கு வித்துட்டோம். இப்ப கிணத்துப் பாசானம் உள்ள திருத்து வயல் மட்டும்தான் இருக்கு.
சீசன் தொடங்கியது பேப்பர்ல படிச்சதுமே கீழக் கொளம் என் நினைப்புல அலையடிக்க ஆரம்பிச்சிருச்சு. எப்படி இருக்கு கொளம்னு அம்மாவுக்கு போன் பண்ணுனேன். ‘ஊருக்குள்ளே மழை பெஞ்சதுல ஓடித் தேங்குன தண்ணிதான் கிடக்கு. வாய்க்காலைத் திறந்து தண்ணி கொண்டாறலை… கொளம் ரொம்பலைடா’னு சொன்னாங்க.
கீழக் கொளத்துப் பாசன வயல் எல்லாம் ப்ளாட் ஆகிவிட்டது. இப்போது கொளம் ரொம்புனா வயல்ல ஊத்து அடிக்கும்… ப்ளாட்டை வாங்க எவனும் வரமாட்டான்னு கொளத்தைக் காயப் போட்டுருக்காங்க. செண்டுக்கு லட்ச ரூபாய் போகுதாம்.
‘நல்ல வேளைடா… நாம வயலா இருக்கறப்பவே வித்துட்டோம். நம்மகிட்டே வாங்குனவங்க ஏழெட்டு வருசமா விவசாயம் பார்த்துட்டாங்க… இல்லன்னா அடிமாட்டுக்கு லட்சுமியை வித்த மாதிரி குத்த உணர்ச்சி கொன்னுரும்…’ என்றார் அம்மா.
இனி எங்க ஊரைப் போலவே கீழக் கொளமும் கொட்டாகுளம்தான்!

3 comments: