உதவி என்று யார் வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் செய்யக் கூடியவர் என்று சொல்லப்படுபவர்களுக்கு மத்தியில் ராஜகணபதி வித்தியாசமானவர். உதவி என்று போய்க் கேட்க் வேண்டியதில்லை. நமக்குத் தேவை என்பதை உணர்ந்து அவரே ஓடி வந்து செய்வார்.
விகடனில் அவர் சூப்பர் சீனியர் நிருபர். நானோ கத்துக்குட்டி! ஃப்ரீலான்ஸராகப் போய் வந்து கொண்டிருந்த காலத்தில் ஹைகோர்ட், எழும்பூர் கோர்ட், கமிஷனர் அலுவலகம், தீயணைப்பு அலுவலகம் என்று சகட்டு மேனிக்கு சுத்தியடிப்பார்கள். எந்த அலுவலகத்துக்குப் போய் நான் விகடன்ல இருந்து வர்றேன் என்று சொன்னாலும் ராஜ கணபதி எப்படி இருக்கார் என்று விசாரிக்க நிச்சயம் ஒருவராவது இருப்பார்.
எப்போதும் கைவசம் நான்குவிதமான டெலிபோன் டைரிகள் வைத்திருப்பார். அரசு வழங்கும் அதிகாரிகளின் எண்கள் அடங்கிய டைரியில்கூட பல எண்களை புதிதாக எழுதி வைத்திருப்பார். எந்தத் துறை பற்றிக் கேட்டாலும் விவரங்கள் விரல் நுனியில் இருக்கும். எனக்கும் அவருக்குமான முதல் அறிமுகம் இன்னமும் எனக்குள் பசுமையாக இருக்கிறது.
குமரியையே கதிகலக்கிய ரவுடி லிங்கம் நாகர்கோவில் கிளை சிறைச்சாலையில் வைத்து கழுத்து அறுத்து கொல்லப்பட்டு விட்டான். அந்தச் சமயத்தில் நான் நெல்லையில் இருந்ததால் உடனே ஸ்பாட்டுக்குப் போய் செய்தி எழுதுங்கள் என்று எனக்குச் சொன்னார்கள். நானும் போய் லிங்கத்தின் கடைசி சடங்குகள் வரை செய்தி சேகரித்து கொடுத்துவிட்டேன். கட்டுரை எல்லாம் ஓகே... ஜெயிலுக்குள்ளே புகுந்து வெட்டியிருக்காங்க... எப்படி நடந்துச்சு இந்த சம்பவம்... அதைச் சொல்லணும்ல என்று ஆபீஸில் இருந்து கேட்க, என்னிடம் பதில் இல்லை.
அப்போது ராஜகணபதி லைனில் வந்தார். பாபு... ஜெயில் விஷயத்தை நான் பார்த்துக்கறேன்... நீங்க அங்கே இருந்து போட்டோ மட்டும் கலெக்ட் பண்ணி அனுப்புங்க... நாம பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். அந்த இதழ் ஜூவியில் லிங்கம்தான் கவர் ஸ்டோரி... ஜெயிலின் நீள அகலம் என்ன... அதன் அமைப்பு எப்படி... எங்கே லிங்கம் இருந்தான்... எப்படி கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்று பெரிய பாக்ஸ் மேட்டர் வந்திருந்தது. அத்தனையும் ராஜ கணபதியின் உழைப்பு! அன்று அவர்தான் என்னை அலுவலகத்தில் காப்பாற்றினார்.
அடுத்து ஒருமுறை... உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்து கொண்டிருந்த நேரம்... தமிழக அரசியலிலும் பரபரப்பு அனலடித்துக் கொண்டிருந்தது. நானோ விகடனில் கிரிக்கெட்டில் யார் ஜெயிப்பார்கள் என்று விஐபிகளிடம் பேட்டி எடுக்கலாம் என்று சொல்லி பட்டியலில் கருணாநிதியின் பெயரையும் எழுதிக் கொடுத்திருந்தேன். அப்போது அவர் முதலமைச்சர்! பட்டியல் ஓகே ஆகி வந்தபோது கருணாநிதி பெயருக்கு அருகில் நட்சத்திர குறி இட்டிருந்தார்கள். அப்படியென்றால் அந்தப் பெயரை சாய்ஸில் விடக் கூடாது என்று அர்த்தம்.
நான் திமுக பீட் பார்க்கும் நிருபரிடம் கருணாநிதியை எப்படி பிடிப்பது என்று விசாரித்துக் கொண்டிருந்தேன்... ராஜகணபதி என்னிடம் நாளைக்கு காலையிலே எட்டரை மணிக்கு கோபாலபுரம் வந்துடுங்க என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அடுத்தநாள் காலையில் கோபாலபுரம் சென்றபோது எனக்கு முன்னே வந்திருந்தார். துரைமுருகன், ஆற்காட்டார் போன்ற அமைச்சர்கள் கீழே காத்திருக்க முதல்வரின் தனி உதவியாளர் சண்முகநாதன் எங்களை மாடிக்கு அழைத்துச் செல்ல, கருணாநிதி காலை உணவுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்த நொடியில், வாய்யா ராஜ கணபதி... என்ன விஷயம்? என்றார். ராஜகணபதி விவரத்தைச் சொல்ல, ரெண்டு இட்லி சாப்பிடும் நேரத்தில் எனக்கு கிரிக்கெட் பேட்டி கொடுத்தார் முதல்வர்.
அந்த பேட்டியில் ராஜகணபதியின் பெயரையும் சேர்த்திருந்தேன். மிக கவனமாக அதை எடுத்து, என் பெயர் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டார். இதெல்லாம் அஃபீஷியல்...! பத்திரிகையின் நலனுக்காக என்று சொல்லலாம். ஆனால், தனிப்பட்ட முறையிலும் எனக்கு அவர் செய்த உதவிகள் ஏராளம்.
எனக்கும் நண்பர் அறிவழகனுக்குமாக அவர் வீடு தேடி அலைந்திருக்கிறார். ஒரு அபார்ட்மெண்டில் பேச்சிலர்களுக்கு வீடு கிடையாது என்று சொல்ல, அவருடைய அம்மா எங்களோடு தங்குவதாகச் சொன்னார். அந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்பவர். என் தந்தைக்கு டிரான்ஸ்பர் தேவைப்பட்ட பொழுதில் அவர்தான் ஒரு மருத்துவரைப் பார்த்து அவர்மூலம் சுகாதார செயலரைப் பார்த்து டிரான்ஸ்பரை பெற்றுக் கொடுத்தார். அதன்பிறகு அவர் டெல்லி செய்தியாளராக தலைநகருக்குச் சென்றபிறகு அதிகம் பேசிக் கொள்வதில்லை. நான் விகடனை விட்ட பிறகு பேசுவது ரொம்பவே அபூர்வமாகி விட்டது.
ஒருநாள் சன் சொலைக்காட்சியில் வேலை முடிந்து வந்து கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் என்னைக் கடந்து போன டூவீலர் காரர் பின்னிருக்கை கதவு சரியாக மூடப்படவில்லை என்று சொல்ல, உடனடியாக இடது ஓரம் நிறுத்தி பார்க்கிங் விளக்கை ஒளிரவிட்டு விட்டு இறங்கி பின் கதவை இறுக மூடினேன். சட்டென்று மொத்த கதவுகளும் லாக் ஆகிவிட்டன. சாவி உள்ளே... என் ஜின் ஓடிக் கொண்டிருந்தது. என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.
என்ன பாபு... என்ன பிரச்னை..? என்று ஒரு குரல்... திரும்பிப் பார்த்தால் ராஜகணபதி நின்று கொண்டிருந்தார். அன்று காலை டெல்லியில் இருந்து வந்தவர், நண்பரிடம் டூ வீலர் வாங்கிக் கொண்டு பெட்ரோல் போடுவதற்காக வந்திருக்கிறார். அதன்பிறகு தன் வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு என்னோடு அலைந்து (என்னை அழைத்துக் கொண்டு அலைந்து) ஒரு மெக்கானிக்கை அழைத்து வந்து கார் கதவைத் திறந்து கொடுத்தார். அதைவிட ஆச்சரியம், டெல்லி சென்ற பிறகு போன் செய்து அந்த மெக்கானிக் நெம்பி கார் கண்ணாடியை திறந்தாரே... அந்த ஃபீடிங்கை சரி செய்து ஒட்டி விட்டீர்களா... இல்லையென்றால் திருட்டு நடந்துவிடும் என்று நினைவுபடுத்தினார்.
நன்றி ராஜகணபதி சார்... எல்லாவற்றுக்கும்!
1 comment:
யாருடைய உதவியையும் நாட வேண்டியிராத நிலையை இறைவன் அவருக்கு அருள்வாராக. அப்போதுதான் அடுத்தவர்களுக்கு உதவ அவருக்கு இன்னும் நிறைய நேரம் கிடைக்கும்.
Post a Comment