Saturday, February 17, 2024

கடைசி வீட்டு ஆச்சி!

 இந்தத் தலைப்பில் ஆனந்த விகடனில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். அந்தக் கதைக்குள் பல ஆச்சிகள் இடம் பிடித்திருந்தார்கள். அதில் கடைசி வீட்டு ஆச்சிக்கும் பெரிய இடம் இருந்தது.

அவள் பெயர் சுப்பம்மாள்… ஆனால், ஊரில் பலருக்கும் அவளை மருதக்கார ஆச்சி என்றால்தான் தெரியும்… அவள் வாழ்க்கை கொஞ்சகாலம் மதுரையில் கழிந்ததால் அந்தக் காரணப் பெயர்.

கடைசி வீட்டு ஆச்சி என்பது கதையில் தெருவின் கடைசியில் இருக்கும் வீட்டைச் சேர்ந்தவள் என்ற பொருளில் இருக்கும். உண்மையில் அவள் வீடு தெருவின் நடுவேதான் இருந்தது.

எங்களுக்கு மூன்று தலைமுறைக்கு முந்தைய தலைமுறையில் மூன்று சகோதரர்கள். முதலாமவர் என் பாட்டனார்… அவருடைய வீடு மூத்தவனுக்கு மேல்பக்கம் என்ற மரபுப்படி மேற்கே அமைந்தது. இரண்டாமவருக்கு நடுவில் வீடு… கடைக்குட்டிக்கு கடைசியில் வீடு என்று தங்கள் நிலத்தில் மூவரும் பாகம் செய்து கொண்டார்கள். அந்த வகையில் மூன்றாமவரும் கடைசி வீட்டுக்காரருமான வள்ளித் தாத்தாவுக்கு மனைவியாக அமைந்ததால் அவள் கடைசி வீட்டு ஆச்சி!

முறையின்படி பார்த்தால் அவள் என் அப்பாவுக்கே ஆச்சி. ஆனால், அவள் என்னைத் தம்பி என்பாள். ஏனென்றால் அவள் அம்மாவின் பெயரும் குழலாமணி… என் அம்மாவுக்கும் ஒரு பெயர் குழல்வாய்மொழி! அதனால் அவளுக்கு நான் தம்பி… அதுவும் சின்னத் தம்பி!

அவள் வயதுக் கிழவிகளில் அவள் கொஞ்சம் விவரமானவள். ஊரில் எல்லோரும் கூட்டல் குறி போல படம் வரைந்து தாயம் விளையாடினால் அவள் மட்டும் ஒரு பலகையில் சதுரங்கம் போல கட்டங்கள் வரைந்து வேறு விதமான தாயம் விளையாடுவாள். கூடச் சேர்ந்து விளையாடும் கிழவிகளுக்கு விருத்தம் போடும் அளவுக்கு திருத்தமாக காய் நகர்த்தத் தெரியாது.

ஏ மதினி… எதை நவட்டலாம்… ஏ அத்த… இந்த விருத்தத்துக்கு அந்தக் காய அடிக்குமா… என்று அவளிடமே ஆலோசனை கேட்பார்கள். பெரும்பாலும் சாந்த சொரூபியாக இருக்கும் ஆச்சி எப்போதாவது சகுனியாக ஆடுவாள், அதுவும் அவளுக்கு சீக்கிரம் ஆட்டம் முடிய வேண்டுமென்றால்..! என்னையும் சில நேரங்களில் விளையாட்டுக்குச் சேர்த்துக் கொள்வார்கள். என் விருத்தத்துக்கு நானே காய் வைக்கிறேன் என்றால் ஆச்சிக்கு பொங்கிக் கொண்டு வரும்… அதிலும் அவள் காய் எதையாவது அடிப்பது போல வந்துவிட்டால் போதும்… கொதித்து விடுவாள். ‘ஏ ஆப்பா… எதை வைக்கணும்னு சொல்லு… குண்டியத் தூக்கிகிட்டு தூக்கிகிட்டு வராத…’ என்று செல்லமாக மிரட்டுவாள்.

என் மீது கூடுதல் பிரியத்தோடு இருப்பாள். ‘ஏ சின்னத்தம்பி… இந்த தேங்காய ஒடைச்சுக் குடு…’ என்று அழைப்பாள். அவள் வீட்டு பொங்கல் பானையில் தேங்காயை உடைத்து ஊற்றி பால் களைந்து ஊற்றவும் உதவுவேன்.. எங்க வீட்டு பழனியாச்சி கிழக்கு வாட்டமாக தீயை எரித்து பொங்கலை கீழ் முகமாக மிரட்டிப் பொங்க வைத்துவிட்டு, சூரியனப் பாத்து பொங்கியிருக்கு… நல்ல சகுனம் என்று பெருமை பேசிக் கொண்டு இருக்கும் நேரத்தில் பானையை நேர் குத்தாக வைத்து தீயை சரி சமமாக எரித்து எந்தப் பக்கம் பொங்கினாலும் ஏற்றுக் கொள்ளும் நேர்மைக்காரியாகவும் இருப்பாள்.

அம்மாவுக்குத் துணையாக ஆத்துக்குக் குளிக்கப் போவாள். ஊர் வம்பு பேசாமல் குடும்பக் கதைகளை… உறவுகளை… வாழ்ந்தவர்களை நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே வருவாள். ஆற்றில் இருந்து சுள்ளி பொறுக்கிக் கொண்டு வருவாள். ஆச்சி… ஆத்துல என்ன பெறக்குன..? என்றால் சொல்லமாட்டாள். ஏன்னா தாத்தா பேரு வள்ளி… சுள்ளினு சொன்னா அவரு பேரைச் சொல்றாப்புல ஆகிருமாம்!

ஒரே மகன் ஒரே மகள் என்று இரண்டே இரண்டு பிள்ளைகள்தான். இருவர் வீட்டிலுமே அதிகநாட்கள் தங்க மாட்டாள். வீடு வம்பாப் போயிரும் என்று ஓடி ஓடி வந்துவிடுவாள். வீட்டை அத்தனை சுத்தமாக வைத்திருப்பாள். குழம்பு வைக்க கல் சட்டி… சாப்பிடுவதற்கு அட்டகாசமான மரவை (மரத்தால் செய்யப்பட்ட தட்டு) என்று அவள் பயன்படுத்தும் பாத்திர பண்டங்களே வித்தியாசமாக இருக்கும்.

வாய்க்காலை ஒட்டிய வீடு என்பதால் பூச்சி பொட்டுகள் அடிக்கடி வரும் போகும்.. அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். அடிச்சுத் தூக்கிப் போட்டுட்டு போய்ட்டு வாத்தா ஆவுடையானு சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விடுவோம். புற்றுக் கோவில் என்று பெயர் பெற்ற சங்கரன் கோவில் சாமி கோமதி அம்மாள் என்பதால் பாம்பை ஆவுடை என்றும் சொல்வார்கள்.

அடிக்கடி பாம்புத் தொல்லை ஏற்பட, கடைசி வீட்டு ஆச்சி வீட்டுக்கும் கார வீட்டுக்கும் நடுவே இருக்கும் சுவரில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்று முடிவானது. சும்மா ஒப்புக்கு ஒரு சுவர்தானே என்பதால் செங்கல் வரிசை வைத்து சுண்ணாம்பு காரையாக வைத்துக் கட்டியிருந்தார்கள். அதில் நிறைய இடைவெளி இருக்கும். அதனுள் பாம்பு பதுங்கியிருந்தால் எப்படி கண்டுபிடிப்பது..?

சின்னதாக ஒரு மண்பானையை எடுத்து அதற்குள் வைக்கோலும் தென்னங் கூந்தல் நாரும் வைத்து அடைத்து உள்ளே சிறு கங்கை வைத்து ஒரு ஓட்டையை மறைத்து வைத்து பூசி விட்டாள். கூந்தலும் வைக்கோலும் மூட்டமாக மாற அந்த ஓட்டை வழியாக புகை சுவருக்குள் நுழையத் தொடங்கியது. நாங்கள் கம்போடு தயாரானோம். சுவரில் இருந்த ஓட்டைகளுக்குள் பதுங்கி இருந்த பாம்புகள் எல்லாம் டொப் டொப் என்று எகிறி வெளியே குதித்தன! ஒரே நாளில் சுவர் சுத்தமானது. ஆச்சியின் டெக்னாலஜி அப்படி!

கடைசி வீட்டு ஆச்சியை எல்லோரும் நினைவில் வைத்திருப்பார்கள்.. அதற்குப் பல காரணங்கள் உண்டு!

அந்தக் கதையில் எழுதியதைப் போல ஆப்பம் சுட்டு விற்று வந்தாள். அதில் எழுதியது போலவே மாடு பத்திக் கொண்டு போகும் கடற்கரையாண்டிக்கு என்று தனியாக ஆப்பம் சுட்டு வைப்பாள். கணக்கு வைத்துச் சாப்பிட்டுக் காசு கொடுக்கும் சில கஸ்டமர்கள் அவளுக்கு எப்போதும் உண்டு! ஆனால், அவளைப் பொறுத்த வரையில் அது வியாபாரம் இல்லை… பசியாற்றும் உதவி! அப்படித்தான் சொல்லுவாள் அவள்.

மருத மரப் பட்டைகளைச் சேகரித்து வந்து இடித்துப் பொடியாக்கி வைத்திருப்பாள். அது சைபாலுக்கு முன்பே நான் பார்த்த சர்வரோக நிவாரணி… பல்லு வலிக்கு ஆச்சி என்றால் ஒரு சிட்டிகை பொடியை அள்ளி வலிக்கும் பல்லில் பூசுவாள். அதையே பல் விளக்கும் பொடியாகவும் தருவாள். குடி தண்ணீரில் போட்டு லேசான துவர்ப்போடு குடிக்கச் செய்வாள்.

இதை யார் கேட்டாலும் தருவாள்… இலவச மருத்துவம்… இன்னொரு உதவி!

பிடிப்பு தடவுவது, தொக்கம் எடுப்பது போன்ற பிசியோதெரபி வைத்தியராகவும் இருப்பாள். ஆற்றில் கீழே விழுந்ததில் இடது கை கொஞ்சம் பிசகி விட்டது, கடைசி வீட்டு ஆச்சிக்குதான்..! தன் வைத்தியம் தனக்குப் பலிக்காது என்பது போல அந்த இடது கை மொழிக்கட்டு (மணிக்கட்டு) மட்டும் கொஞ்சம் விலகியே செட் ஆகிவிட்டது. ஆனால், அதோடு தன் பிசியோ சேவையைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தாள்.

இரண்டு பக்கமும் ஹெட்லைட் மூக்குத்தி, கலர் சேலை என்று இருந்த ஆச்சி தாத்தா செத்த பிறகு வெள்ளைச் சேலைக்கு மாறிவிட்டாள். கையில் இருக்கும் கைக்குட்டை கூட வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். ஏன் ஆச்சி அப்படினு கேட்டா, ‘அதுதான் ஒன் தாத்தா’னு சொல்வா என்று அந்தக் கதையில் சொல்லியிருப்பேன்.

பொள்ளாச்சியில் இருக்கும் மகன் வீட்டுக்குச் செல்கிறேன் என்று கிளம்பிச் சென்றாள். திருவள்ளுவர் பஸ்ஸில் கடைசி வரிசையில்தான் இடம் கிடைத்தது. ஏறிக் கொண்ட பிறகு 14ம் நம்பர் சீட்டில் இருந்தவரைக் கேட்டு சீட் மாற்றிக் கொண்டு அவரைக் கடைசி வரிசைக்கு அனுப்பியிருக்கிறாள்.

ராஜபாளையம் தாண்டிய வண்டி விபத்துக்குள்ளாக யாருக்கும் எந்தச் சேதமும் இல்லை… 14ம் நம்பர் சீட்டில் இருந்த ஆச்சி மட்டும் ஆயுளை முடித்துக் கொண்டாள்.

சீட் நெஞ்சில் முட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மரம் ஏற்பட்டிருக்கும் என்று சொன்னார்கள். கடைசி கடைசியாக அந்த 14ம் நம்பர் சீட் பயணிக்கு ஆச்சியால் முடிந்த உதவி!

Thursday, February 8, 2024

ரேடியோ ஆச்சி!

ஔவையார் என்று சொன்னாலே நமக்கு வயதான உருவம்தான் நினைவுக்கு வரும்… சும்மா ஆசைக்குப் பார்ப்பதற்குக் கூட ஔவையாரின் இளம்பருவத்து படம் என்று எதுவுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எதற்கு ஔவையார் ரெபரன்ஸ் என்றால் எங்க வீட்டுக்கு மேல்பக்கம் குடியிருந்த திருவாய் ஆச்சியைச் சொல்ல எனக்கு வேறு எதுவும் இல்லை! நான் முதன்முதலில் பார்த்த நாள் முதலாக ஒரே தோற்றத்தில் அதுவும் தளர்ந்த முதிய தோற்றத்தில் இருந்தாள் திருவாய் ஆச்சி!

வீட்டின் மேல்பக்கம் தெருவை ஒட்டி ஒரு செம்பருத்திச் செடி… பேர்தான் செடி… ஆனால், மரம் போல அடர்ந்து நிற்கும். ஒருநாளில் ஐநூறு பூ பூக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு சிவப்பும் பச்சையும் சரிசமமாகத் தெரியும். அதைத் தாண்டி வந்தால் நிஜமான மரம் போல வளர்ந்து நிற்கும் நந்தியாவட்டை. அப்படியே பனியைக் கொட்டியது போல நந்தியாவட்டை பூத்துக் கிடக்கும்.

அந்த நந்தியாவட்டை, செம்பருத்தி பூக்களோடு சேர்த்து ஆற்றோரம் இருந்து பறித்துக் கொண்டு வரும் நொச்சி இலைகளையும் பச்சையாக வைத்து சிவப்பு வெள்ளை பச்சை என்ற வரிசையில் விளக்குச் சரம் கட்டுவாள் திருவாய் ஆச்சி!

வீடுகளுக்கு விளக்குச் சரம் கட்டிப் போடுவதும் அதற்கான கூலியாக நெல் வாங்கிக் கொள்வதுமான வாழ்க்கை அவளுடையது. பிள்ளைகளில் கடைக்குட்டியான பாலையாவின் குடும்பம் அந்த வீட்டில் இருக்க, அவர்களோடுதான் இருந்தாள். பாலையா தாத்தா (ஆச்சியின் கடைக்குட்டி மகனே எனக்கு தாத்தா என்றால் ஆச்சியின் வயதை நினைத்துப் பாருங்க!) ஜெயராம் பஸ் சர்வீஸில் டிரைவராக இருந்தார். அவர் மனைவி பகவதி ஆச்சி பீடி சுற்றுவார். அவர்களின் பிள்ளைகள்தான் திருவாய் ஆச்சிக்கு உதவி!

குறிப்பாக பாலையா தாத்தாவின் நடுள்ள மகன் துரையின் உதவி பேருதவி. அவன் (என்னைவிட இளையவன்) தான் ஆற்றுக்குப் போய் நொச்சி இலைகளைப் பறித்து வருவான், நந்தியாவட்டை மரத்தில் ஏறி குடலை நிறைய பூப்பறிப்பான். சாயங்கால நேரத்தில் சைக்கிளில் குரங்கு பெடல் அடித்துக் கொண்டே போய் வீட்டு வீட்டுக்கு சரங்களைப் போட்டுவிட்டு வருவான். ஆச்சிக்கு உதவியாக இருந்தாலும் சுற்றியிருக்கும் நமக்கெல்லாம் உபத்திரவமாக இருக்கும் ஒரு விஷயம் அவனுடைய பாட்டுதான்! நந்தியாவட்டை மரத்தில் நிறு பூப்பறிக்கும் நேரத்தில் பாட்டு முழங்கிக் கொண்டே இருக்கும். கட்டைக் குரலில் கர்ண கொடூரமான முறையில் கவலையே படாமல் பாட்டு படித்துக் கொண்டிருப்பான்.

அவன் பள்ளிக்கூடம் செல்லும் வரையில் அவன் பாட்டைக் கேட்கும் ஆச்சி, அதன் பிறகு ரேடியோவை ஆன் பண்ணுவாள். இந்த சேனல், இன்ன நிகழ்ச்சி என்ற வரையறை எல்லாம் கிடையாது. ஏதோ ராகம் ஏதோ தாளம் என்று அதுபாட்டுக்கு பாடிக் கொண்டே இருக்கும்.

இசை, பாடல்கள், வயலும் வாழ்வும் செய்திகள் என்று எல்லாமும் முடிந்த பிறகும் இந்தியிலோ ஆங்கிலத்திலோ ஏதாவது குரலில் பேசிக் கொண்டிருக்கும் அந்த ரேடியோ. பகவதி ஆச்சி பீடி சுற்ற பக்கத்து வீடுகளுக்குச் சென்று விடுவார். திருவாய் ஆச்சி மட்டும்தான் வீட்டில் என்பதால் ரேடியோ துணைக்கு இருக்கும்.

ஆச்சியும் அப்படித்தான் சொல்வாள். என்ன படிக்குனு எல்லாம் தெரியாது… அது படிச்சுகிட்டு இருந்தா வீட்டுல ஒரு ஆள் தொண இருக்க மாரி இருக்கும்… எனக்கும் மலைவு தெரியாது என்பாள். அது கூடவே அவள் சொல்லும் இன்னொரு விஷயம், ஆள் இருக்க மாரி இருந்தாலும் ஊர்க்காரப் பயலுவள மாரி அது பொரணி பேசாது என்பதுதான்! அவளும் யாரைப் பற்றியும் பேசமாட்டாள், அவளிடமும் யாரும் யாரைப் பற்றியும் பேச  முடியாது.

மாலை நேரங்களில் வீட்டுக்குப் போனால் கடிச்சாந் தண்ணி குடிக்கியா பாபு என்பாள். தேயிலைத் தூளைப் போட்டு கொதிக்க வைத்து தம்ளரில் ஊற்றிக் கொடுப்பாள், கூடவே கையில் ஒரு கருப்பட்டித் துண்டும். தேநீரை ஒரு மடக்கு குடித்துக் கொண்டு கருப்பட்டியை ஒரு கடி கடித்துக் கொள்ள வேண்டும். அதுதான் கடிச்சாந் தண்ணி! ஒவ்வொரு மடக்குக்கும் சுவை மாறிக் கொண்டே இருக்கும் அந்த தேநீர்!

அதேபோல, டீ தண்ணிக்குள் முறுக்கு, காரா சேவு போன்றவற்றை உடைத்துப் போட்டுச் சாப்பிட்ட பழக்கம் கொண்ட எனக்கு, முதன் முதலில் சோளப் பொரியையும் அது போலவே போட்டுத் திங்கலாம், குடிக்கலாம் என்று கற்றுக் கொடுத்தவள் அவள்தான்!

முதுகுப் பக்கம் சாய்ந்து கொள்ள தலையணை, காலை நீட்டிக் கொள்ள ஒரு சாக்குப் பை… ஒருபக்கம் குவிந்து கிடக்கும் நந்தியாவட்டை, செம்பருத்தி பூக்கள், இன்னொருபக்கம் தண்ணீர் இருக்கும் கிண்ணத்துக்குள் கிடக்கும் வாழைநார் கயிறு! இரண்டையும் இழுத்து இழுத்து சரம் தொடுத்துக் கொண்டே இருக்கும் அவள் கை!

எங்கள் வீட்டு சன்னலும் அவள் வீட்டு முற்றமும் அருகருகே இருக்கும். இங்கிருந்து ஏச்சி என்று குரல் கொடுத்தால் அங்கிருந்து என்ன பாபு என்று பதில் சொல்லுவாள். அளிப் பாய்ச்சிய திண்ணையின் ஊடாக அவள் அமர்ந்திருப்பது தெரியும்.

ஒருநாளில் ஆச்சி வீட்டுக்கு வெளியே இருக்கும் மாப்பிள்ளைத் திண்ணையில் அமர்ந்து பாலையா டிரைவர் தாத்தா எதையோ ரிப்பே பார்த்துக் கொண்டிருந்தார். எட்டிப் பார்த்தால் அது ஆச்சியோடு பேச்சுத் துணையாக இருக்கும் ரேடியோ! ஒங்க தாத்தா ஒக்கிட்டுட்டான்… அவனே ஒக்கிட்டுத் தாரேம்னு சொல்லியிருக்கான்… பாப்போம் என்றாள்.

ஆச்சியின் மூத்த பிள்ளைகள் வேலைகளில் இருந்தார்கள். கொஞ்சம் வசதியாகவும் இருந்தார்கள். ஆனால், கடைக்குட்டி கொஞ்சம் கஷ்டப்படுகிறான்.. நான் இங்கிருந்தால் அவனுக்கு உதவியாக இருக்கும் என்று சொல்லி கடைசி வரையில் இங்கேயே இருந்துவிட்டாள்.

அவள் காலத்துக்குப் பிறகு அந்த செம்பருத்திச் செடி, நந்தியாவட்டை எல்லாம் எடுபட்டு விட்டது. ஆச்சியின் வீடு நடுள்ள மகன் மற்றவர்களுக்கு பணம் கொடுத்து வாங்கி விட்டார். கொஞ்சகாலத்தில் அவரும் வேறு ஒருவருக்கு விற்றுவிட, இப்போது ஜன்னலையே மறைத்துக் கொண்டு நிற்கிறது பெரும் சுவர். அந்தச் சுவருக்கும் அப்பால் ஏதேதோ மனித குரல்கள் கேட்டாலும் அந்த ஜீவனுள்ள ரேடியோ குரல் கேட்பதே இல்லை!

அதுசரி, அந்த ரேடியோ ஆளின் பேச்சுத் துணையைத் தேடும் திருவாய் ஆச்சிதான் அங்கில்லையே!

Sunday, January 28, 2024

’கதை சொல்லி’ பழனி ஆச்சி!

 ஒரு ஊர்ல ஒரு அண்ணன் தங்கச்சி… அந்தப் பொம்பளப் புள்ள பொறக்கயிலயே அவங்களோட அம்மாவும் அப்பாவும் செத்துப் போயிட்டாங்க… குடியிருக்க ஒரு குச்சிலு மட்டும்தான் சொந்தம்… அந்த அண்ணன் காரன் தான் தங்கச்சிய வளத்தான்… சின்னப் பய… அவனுக்கு என்ன முடியுமோ அதைக் கொண்டாந்தான்… காடு கரைனு போயி கையில கிடைக்கிற கீரைய எல்லாம் பறிச்சுகிட்டு வந்தான்… வழியில இருக்கிற குசக் குடியிலே ஒரு சட்டி யாசகம் கேட்டு வாங்கிட்டு வந்தான்… தோப்புக்காடுகள்ல பெறக்குன வெறகுகளைக் கொண்டாந்து போட்டு அடுப்பெரிச்சு அந்த கீரைய சட்டில போட்டு அவிச்சு தங்கச்சிக்கும் குடுத்து தானும் சாப்பிடுவான்… அதுதான் அவங்களுக்கு சாப்பாடு!

அடுத்த நாளு… அதுக்கு மறுநாளுனு அதுதான் சாப்பாடா இருந்துச்சு… ஒருநாள் என்ன செஞ்சான்… எப்பவும் போல கீரைய ஆஞ்சு கொண்டாந்து சட்டில வச்சு அவிச்சுட்டு, கொஞ்சம் ஆறட்டும்… அதுக்குள்ள குளிச்சுட்டு வந்துருவோம்னு குளிக்கப் போனான்.

நெதம் அண்ணந்தான நமக்கு கீர கடஞ்சு தாரான்… ஒருநாளு நாம அவனுக்கு கடஞ்சு குடுப்போம்னு கீர மத்தை எடுத்துகிட்டு போய் கீரச் சட்டியத் தூக்குனா தங்கச்சி… சூடு பொறுக்காம சட்டிய டொம்முனு தரையில வச்சுட்டா… சட்டி ஒடஞ்சிருச்சு…

குளிச்சுட்டு அண்ணன் காரன் பசியோட வந்தான். தங்கச்சி அழுதுகிட்டே நின்னா… அடுப்பங்கரையில சட்டி ஒடைஞ்சு கீர பூராம் கொட்டியிருந்ததப் பாத்தான். நிமிசத்துல கோபம் மூக்குக்கு ஏறிருச்சு. கீர மத்தை எடுத்து தங்கச்சி மேல எறிஞ்சான். அதே வேகத்துல அவளத் திரும்பிக் கூட பாக்காம வெளில போயிட்டான்… அது அவ நெத்திப் பொட்டுல கீறிட்டு. குபுகுபுனு ரெத்தம்… அழுதுகிட்டே நின்னா!

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து ஆளுக ஓடியாந்தாங்க… அம்மா இல்லாத புள்ளைய இப்படிப் போட்டா அடிப்பான் மனுசன்னு அவளக் கூட்டிகிட்டு போனாங்க… அவளும் அண்ணன் மேல இருந்த கோவத்துல அழுதுகிட்டே போயிட்டா. கோவத்தோட போன அண்ணன் ஊரெல்லாம் சுத்திட்டு ராத்திரி போல ரெண்டு கெழங்கக் கையில புடிச்சுகிட்டு வீட்டுக்கு வந்தான்.

வெளக்குப் பொருத்தாம வீடு இருட்டிக் கெடந்துது. தங்கச்சி பேரச் சொல்லி கூப்டுகிட்டே வந்தான். அவ இல்ல… எங்க போனானு தெரியலையேனு அக்கம்பக்கத்துல விசாரிச்சான்.. அங்க போனா இங்க போனானு சொன்னாங்களே தவிர யாருக்கும் சரியாச் சொல்லத் தெரியல… அப்பதான் ஊர்கார கெழவி ஒருத்தி புள்ள இல்லாத ஒரு புருசன் பொண்டாட்டி இங்க சத்துரத்துல இருந்தாங்க… அழுதுகிட்டு நின்ன புள்ளைய நாங்க வளக்கோம்னு சொல்லி கூட்டிட்டுப் போயிட்டாங்கனு சொன்னா. அண்ணனுக்கானா அழுகை அழுகையா வருது. எந்த ஊரு… என்ன லெக்குல போனாங்கனு விசாரிக்கான். யாருக்கும் தெரியல… பித்துப் புடிச்சாப்ல அலையுதாம். பொறவு அந்த ஊர்லயே இருக்கப் புடிக்காம வெளியூரு போயிருதான்.

வெளியூர்ல போயி கெடைச்ச வேலையப் பாக்காம்… அந்தத் தொழில் புடிபடுது… வேலைய விட்டுட்டு சொந்தமா தொழில் பண்ணுதாம்… நல்ல சம்பாத்தியம் கெடைக்கி… அந்த ஊருல ஒரு பெரிய மனுசனாகிருதாம். அவன்கிட்ட பத்து பேரு வேலை பாக்க அளவுக்கு வளர்ந்துருதான். மச்சு வீடெல்லாம் கட்டி வேலைக்கு ஆளு, போக வரு வண்டி வசதினு உண்டாக்கிட்டான்…

அப்ப அவன்கிட்ட வேலை பாக்க பெரியவரு ஒருத்தரு, இப்படியே இருந்தா எப்டி மொதலாளி… ஒரு கல்யாணம் முடிக்கலாம்லானு கேக்காரு… அவனும் சரி பொண்ணப் பாருங்கனு சொல்லிருதான்… அவரும் ஆளுகளுமா கூடமாட சேந்து ஒரு பொண்ணப் பாக்காங்க. இப்பம் இவன் தகுதிக்கு நா நீனு போட்டி இருந்தாலும் நல்ல குணமுள்ளவளா பாத்து கல்யாணம் முடிக்காங்க.

கல்யாணம் முடிஞ்ச மறுநாளு அவன் பொண்டாட்டி தலைக்கு குளிச்சுட்டு தலைய காயப்போட்டுகிட்டு மச்சுல நிக்கா… இவன் கீழ உக்காந்து யாருகூடவோ பேசிகிட்டிருந்தான்… மேல நிழலு விழுததப் பாத்து நிமுந்து பாக்கான்.. பொண்டாட்டி தலைகாயப் போட்டுகிட்டு நிக்கா… தலைக்கு பின்னால சூரிய வெளிச்சம் விழ அப்படியே மினுங்குதா… அப்டியே உத்துப் பாக்கான்… மஞ்சள் பூசுன மூஞ்சியிலே கண்ணுக்கு மேலே நெத்தியிலே ஒரு தழும்பு இருந்துச்சு.

அவனுக்கு மொழுக்குனு இருந்துச்சு… மச்சுக்கு ஓடுனான்… அந்த தழும்பக் காட்டி, இது எப்டி பட்டுச்சுனு கேட்டான்.. சின்ன வயசுல கீர கடையயில எங்கண்ணன் கீர மத்தைக் கொண்டு  மண்டையில அடிச்சுட்டான்னா… அவனுக்கு கிறுகிறுனு வந்திருச்சு…’’

’’ஏச்சி.. புள்ளையள்ட சொல்லுத கதையா இது.. வேல மெனக்கெட்டு இத ஒரு கதனு சொல்லிகிட்டிருக்கியே… என்று அம்மா ஆச்சியைக் கண்டித்துவிட்டு எங்களை முதுகில் ஒரு போடு போட்டு துரத்தி விடுவாங்க.

ஆச்சி பேரப் புள்ளைகளுக்கு கதை சொல்றது ஒண்ணும் புதுசு இல்ல… பெரும்பாலும் எல்லாருமே ஒரு ஊர்ல ஒரு ராஜானுதான் கதை சொல்லியிருப்பாங்க… ஆனா, எங்க பழனி ஆச்சி ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த, அனாதையாக தங்கையுடன் வாழ்கிற, தங்கை காணாமல் போன பிறகு வாழப் பிடிக்காமல் ஊரை விட்டு ஓடிப் போகிற, ஏதோ ஒரு தொழிலில் தன்னை நுழைத்துக் கொண்டு உழைத்து முன்னேறுகிற இளைஞனின் கதையைச் சொல்லுவாள்!

அப்பாவைப் பெற்ற ஆச்சியான பழனியாச்சி என் அம்மாவுக்கும் ஆச்சிதான். எங்கம்மாவுக்கு என் அப்பா தாய்மாமா முறை. அண்ணனும் தங்கையும் தங்களின் சுயம் அறியாமல் வேறு வேறு பின்னணியில் வளர்ந்து அவர்களே திருமணம் செய்து கொண்ட கதை எனக்கு அந்த நாட்களில் புரியவில்லை. அம்மா ஏன் இந்தக் கதைக்கு இவ்வளவு கோவப்படுறாங்க என்றும் தெரியவில்லை.

ஆச்சிக்கும் புரட்சிகரமான கதையைச் சொல்லிவிட வேண்டும் என்ற நோக்கமெல்லாம் இருந்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளைகளுக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். அவளுக்குத் தெரிந்த ஒரு கதையைச் சொல்வாள்.

ஆனால் கல்யாணம் செய்து கொண்ட அந்த ஜோடி அண்ணன் தங்கை என்பது தெரிந்த பிறகு அவர்கள் என்னவானார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆச்சியிடம் எப்போது மிச்சக் கதையச் சொல்லு என்றாலும், போ அங்குட்டு… ஒங்கம்மா கிழியாக் கிழிப்பா..? என்பாள். இன்றுவரையில் அந்தக் கதையின் முடிவு என்னவென்று தெரியவில்லை.

ஆனால், ஆச்சி எங்கிருந்து இந்தக் கதைகளை எடுக்கிறாள் என்பது புரியாத விஷயம். வயல் வேலைகளுக்கு ஆட்களைக் கூட்டிச் செல்வாளே, அப்போதா… சில பல ஆச்சிகளோடு அமர்ந்து புளி திருத்துவாளே, அப்போதா… வயலில் விளைந்த காய்கறிகளைப் பெட்டியில் போட்டுக் கொண்டு தெருத்தெருவாக கூவி விற்று வருவாளே, அப்போதா… எப்போது சேகரிப்பாள் என்றே தெரியாது!

ஆச்சியின் பூர்வீகம் தென்காசிக்கு அருகில் உள்ள ஆய்க்குடி என்ற சிறிய ஊருக்கு அருகில் இருக்கும் சின்னஞ்சிறு கிராமமான கம்பிளி! தன் ஊரின் கதைகளை ஆச்சி சொல்லிக் கேட்டதே இல்லை..! சொந்தம் விட்டுப் போயிறக் கூடாதுனு ஒங்க ஆச்சிய ஒங்க தாத்தாவுக்கு கெட்டி வெச்சாங்க… இல்லன்னா  அவரு தரத்துக்கு பொண்டாட்டியா இவ… என்று ஆச்சியின் நாத்தனார்காரிகள் உதட்டைச் சுழிப்பார்கள். ஆனால், அப்பாவுக்குப் பிறகு பிறந்த ஒரு டசன் பிள்ளைகளின் வரவு சொல்லும், ஆச்சியும் தாத்தாவும் எப்படி வாழ்ந்தார்கள் என்று! (அப்பாவைத் தவிர யாருமே தங்கவில்லை என்பது தனி சோகம்)

பழனியாச்சி வெள்ளந்தியானவள்… அவளை ஆங்கிலம் பேச வைத்து ரசிப்போம் நாங்கள். ஆச்சி… போஸ்ட் ஆபீஸ் சொல்லு..? என்றால் போட்டாபீஸ் என்பாள். ஸ்டாம்ப் சொல்லு என்றால் சாம்ப் தாளு என்பாள். ஆனால், போஸ்ட் ஆபீஸ் பற்றியும் அங்கு விற்பனை ஆகும் ஸ்டாம்ப் பற்றியும் அவள்தான் விவரம் கேட்டுக் கேட்டு தெரிந்து கொள்வாள்.

தாத்தா ரயில்வேயில் வேலை பார்த்தவர். சர்வீஸில் இருக்கும்போதே இறந்துவிட, ஆச்சிக்கு பென்ஷன் கிடைக்கத் தொடங்கியது. கூடவே பணியாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்கும் என்ற அடிப்படையில் ஃபார்மஸி படித்த என் தந்தை அந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். சம்பிரதாயமான மனுவாக, என் தந்தையின் வேலையை எனக்குத் தந்தால் என் குடும்பம் பிழைக்கும் என்று கருணை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரிக்க, ரயில்வேயில் இருந்து அதிகாரி ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அம்மா… ஐயா இறந்து போனதுல உங்க குடும்பம் கஷ்டப்படுதா என்று கேட்க, அவுக இல்லேங்கறதத் தவிர வேற குறை இல்லை… கடவுள் புண்ணியத்துல வயல், வீடு, தோப்பு துறவுனு நல்லாத்தான் இருக்கோம்.. என்று சொல்லிவிட, அந்த அதிகாரி, இந்த வேலை வழங்கப்படாவிட்டாலும் இன்னாருடைய குடும்பத்துக்கு எந்த கஷ்டமும் வராது என்று அறிக்கை அனுப்பிவிட்டார். ஆச்சியின் ஒரே பதில், நா உள்ளதத் தானே சொன்னேன் என்பதுதான்!

ஆச்சி ஒருதடவை என் பேரன் பாஸ் ஆகிட்டா அவன் கையால ஒனக்கு பூக்கூடை கொண்டாறேன் என்று வேண்டிக் கொண்டாள். எஞ்சினியரிங் முடித்து இன்று பெரிய வேலையில் இருக்கும் என் சகோதரன் பரீட்சையில் பாஸ் ஆக வேண்டும் என்று என் ஆச்சி வேண்டிக்கொண்டது அவருடைய ஒண்ணாங்கிளாஸ் பரீட்சையின்போது! என் அம்மா ஆச்சியை சத்தம் போட்டு அடுத்தடுத்து அவள் மொட்டை போடுவது அதுஇதுவென்று முன்னேறிச் சென்று விடாமல் தடுத்த விட்டார்கள்.

ஒரே மகன் தான்… ஆனாலும் அவளுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி பிணக்கு வரும்… வீட்டை விட்டு வெளியேறி எதிரே இருக்கும் குச்சிலில் தனி சமையல் செய்வாள். முறைப்பாகத் திரிவாள். திடீரென்று பாத்திர பண்டங்களை அள்ளிக் கொண்டு வந்து அடுக்களையில் போட்டுவிட்டு ஒன்றாகச் சாப்பிடுவாள். அதனாலேயே அம்மா அவள் செல்லும்போதும் ஏனென்று கேட்பதில்லை… மீண்டும் வரும்போதும் ஏதும் சொல்வதில்லை.

தோள்பட்டை தொடங்கி மணிக்கட்டு வரையிலும் இரண்டு கைகளிலும் பச்சை குத்தியிருந்த ஆச்சி அந்தக் கை முழுக்க சுருக்கங்கள் படர்ந்த நேரத்தில் பாத்திர பண்டங்களோடு பேங்க் பாஸ்புக்கையும் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்து போட்டாள். என்னைக் கொண்டு முடியல… இந்தா… நான் இருக்கையிலேயே பணத்த எடுத்துரு… செத்துட்டம்னா அதை எடுக்க செரமப்படுவீங்க… என்றாள். சொன்னபடியே அவளால் எந்தச் சிரமமும் இருக்கவில்லை.

நிறை வாழ்வு வாழ்ந்தவள்தானே… பேரன்கள் எல்லாருமாகச் சேர்ந்து மேளதாளம் வைத்து வழியனுப்பலாமே என்றார்கள். ஒரு மரணத்தை எப்படிக் கொண்டாட முடியும்… அதோடு, தன் தங்கை என்பதை அறியாமலே திருமணம் செய்து கொண்டவன் அந்த உண்மை தெரிந்த பிறகு என்ன செய்தான் என்பதைத் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு சென்றவளின் விடைபெறுதலில் சிறு வருத்தம் இருக்கத்தானே செய்யும்!

Sunday, January 21, 2024

டிரைவர் தாத்தா வீட்டு ஆச்சி!

 எங்க ஊர்ல (கொட்டாகுளம், தென்காசி மாவட்டம்) டிரைவர் தாத்தா வீட்டு ஆச்சினு ஒருத்தி இருந்தா! (ஒருமை எல்லாமே உரிமைதான்!) அந்த வீட்டுத் தாத்தா ரயில்வேயிலே டிரைவரா இருந்ததால அந்த ஆச்சி டிரைவர் தாத்தா வீட்டு ஆச்சி! அவளுக்கு வேறு சில பெயர்களும் இருந்தன. சுளுக்கு தடவுத ஆச்சி… பார்வை பாக்குற ஆச்சி என்பது போல… கூடவே பெத்தவங்க வெச்ச பேரான பொன்னம்மா ஆச்சி என்ற பெயரும் இருந்தது!

பொதுவாக இரட்டைப் பிள்ளைகளைப் பெறும் அம்மாக்களுக்கு சுளுக்குத் தடவும் திறன் வந்துவிடுவதாக ஊர்பக்கம் ஒரு நம்பிக்கை! அந்த ஆச்சிக்கும் இரட்டைப் பிள்ளைகள் இருந்தனர். ராமலட்சுமி சித்தியும் லட்சுமண மாமாவும்! அந்த இருவரும் கடைக்குட்டிகள்… அவர்களுக்கு முன்னதாக சண்முக ஆச்சியில் (ஆமா… அம்மாவும் ஆச்சி… மகளும் ஆச்சி…) தொடங்கி அரி மாமா வரையில் மூணு நாலு பொம்பளைப் புள்ளைகள்… ரெண்டு மூணு ஆம்பளைப் புள்ளைகள்!

சிறு வயதில் மரங்களில் ஏறுவது, குளங்களில் தாவுவது, வயக்காடுகளில் ஓடுவது போன்றவற்றுக்கு நடுவே பள்ளிக்கூடமும் போய் வந்து கொண்டிருந்தேன். அதனால் அடிக்கடி எனக்கு சுளுக்குப் பிடித்துக் கொள்ளும். அம்மா பொன்னம்மா ஆச்சி வீட்டுக்குத்தான் கூட்டிப் போவார்.

இந்த இடத்தில் டிரைவர் தாத்தா பற்றிய சிறு குறிப்பு… நான் முதன்முதலில் சட்டைக் கைப் பகுதியில் தங்க பித்தான் வைத்து போட்டிருந்ததைப் பார்த்த முதல் மனிதன் அவர்தான். எனக்கு விவரம் தெரிந்த காலத்திலேயே அவர் ரிட்டயர்ட் ஆகிவிட்டார். ஆனாலும் டிரைவர் என்பதுதான் அவர் அடையாளம். முன் பற்கள் கொட்டிப் போய் நாக்கை வைத்து அந்தப் பள்ளத்தை மறைத்துக் கொண்டேதான் பேசுவார்.

கூடவே இடைவிடாமல் கையில் சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும். அதனாலும் இருமலுக்கு நடுவே பேசுவதால் அவருடைய பேச்சில் தெளிவு இருக்காது. ஆனால், கிண்டல் செய்கிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரியும்.

‘என்னடே… மாசத்துக்கு ஒரு தரவ எம் பொண்டாட்டி ஒன்னத் தடவிக் குடுக்கணுமோ… கூட்டுப் போய் கூட வச்சுக்கிட வேண்டியதுதான… என்பார். அந்த வயதில் எனக்குப் புரியாது. ஒங்களுக்கு வேணும்னா நீங்களும் தடவச் சொல்லுங்க… என்பேன். சுற்றி இருக்கும் எல்லாரும் சிரிப்பார்கள். அதுவும் எதற்கு என்று எனக்குப் புரியாது. என்ன சொல்லுதாவோ ஒங்க தாத்தா என்றபடி அடுக்களையில் இருந்து ஈரக் கையைச் சேலையில் துடைத்தபடி வருவாள் ஆச்சி.

அவளுக்கு முன்னே வரும் அவளுடைய சிரிப்பு. சின்ன சத்தம் எல்லாம் இல்லை… ஹா… ஹா… என்றாள் என்றால் பத்து தெரு தாண்டி இருக்கும் பஸ் ஸ்டாண்டில் எஸ்.ஏ.டி. ஹார்ன் அடித்தது போல இருக்கும். சத்தம் தெருவுக்கு கேட்கும் வகையில் இடியாகச் சிரிப்பது அவள் இயல்பு.

தாத்தா தங்கப் பித்தான் என்றால் ஆச்சி சின்ன ஜரிகைக் கரை வைத்த பட்டுப் போன்ற சேலைதான் கட்டுவாள். பெரும்பாலும் அடர் நிறத்தில் இருக்கும் சேலையாகத்தான் இருக்கும். எப்போது போனாலும் துலக்கமாக இருப்பாள்.

சிறு பிள்ளைகளுக்கு குடல் ஏறிவிட்டது என்றால் ஆச்சியிடம்தான் தூக்கிக் கொண்டு ஓடி வருவார்கள். என்னன்னே தெரியல… வயத்தால நிக்காம போவுது… என்று வரும் தாயை முதலில் பிள்ளைக்கும் தாய்க்கும் விபூதி பூசி விட்டு சமாதானப்படுத்துவார். ‘ஒண்ணுஞ் செய்யாது… முதல்ல புள்ளையத் தூக்கி நிக்க வை… என்பாள். பிள்ளையின் முன்னால் குத்துக்கால் வைத்து அமர்ந்து கொண்டு தன் முன்னங்கால்களைக் கொண்டு நிற்க வைக்கப்பட்ட பிள்ளையின் கால்களை அழுத்தி மிதித்துக் கொள்வாள்.

அடி வயிற்றில் இடமும் வலுமாக தட்டிப் பார்ப்பாள். ஏதோ ஒரு பக்கத்தில் பொத் பொத்தென்று சத்தம் வரும். அந்த இடத்தைக் குறித்துக் கொள்வாள். எண்ணையைத் தொட்டு மெதுவாக மேலே இருந்து பெருவிரலால் அழுத்தி கீழ் நோக்கி இழுப்பாள். பிள்ளை மூச்சுத் திணறும். முறுக்கிக் கொள்ள முயற்சிக்கும். ஆனால், காலை நகர்த்தவே முடியாமல் ஆச்சியில் முன்னங்கால் அழுத்தியிருக்கும்.

‘குன்னுதாம் பாரு… எங்கனயோ தலைகுப்புற விழுந்திருக்கான்… அதான், குடலு ஏறியிருக்கு…’ என்பாள். அந்தப் பிள்ளையைப் பெத்தவளுக்கு அப்போதுதான் ஞாபகம் வரும். ஆமா ஆச்சி… நேத்து சாய்ங்காலம் நா டிவி பாத்துகிட்டு இருந்தேன்… இந்தப் பய பின்னாடிகூடி சேருல ஏறுனான்… அப்டியே கொட சாஞ்சுட்டான்… தல தரையில அடிக்கதுக்குள்ள தூக்கிட்டேன்… அப்பம் புடிச்சு பாலுகூட குடிக்கல… அதான் கொடல் ஏத்தம் போலுக்கு! என்றபடி பிள்ளையைப் பிடித்துக் கொண்டு நிற்பாள்.

நல்லா கம்முகூட்டுக்குள்ள கையக் குடுத்து அத்தாசமா தூக்கிப் புடி… வில்லா வளையுதாம் பாரு… என்றபடி பொத் பொத்தென்று சத்தம் வரும் பகுதியில் இடது உள்ளங்கையை தொடுவது போல வைத்துக் கொண்டு அந்தப் புறங்கையில் வலது கையால் லேசாகக் குத்தியபடி மேலே இருந்து கீழே இறக்குவாள்.

முக்கிக் கொண்டும் முனங்கிக் கொண்டும் இருந்த பிள்ளை மெதுவாகச் சிரிக்கும். ஒரு துண்டு அச்சுவெல்லத்தை எடுத்து கையில் கொடுத்து, தூக்கிட்டுப் போ… நல்லா அழவிட்டு பாலக் குடு… வயத்தால போறது புடிச்சிரும்… என்று இன்னொரு முறை விபூதியைப் பூசி அனுப்பி விடுவாள். ஒரு பைசா ஃபீஸ் கிடையாது! அவர்களிடம் எல்லாம் எதுவும் சொல்லாத டிரைவர் தாத்தா என்னிடம் மட்டும் எசலுவார்.

ஏடே… ஒங்கப்பன்கிட்ட ரூவா வாங்கியாந்திருக்கியா… சும்மா சும்மா எம் பொண்டாட்டிட்ட வந்து சட்டையக் கழட்டிட்டு நிக்கியே… என்னடே நெனைச்சுகிட்டிருக்க…’ என்பார். எனக்கு அவர் விளையாட்டாகக் கேட்கிறாரா… சீரியஸாகக் கேட்கிறாரா என்று ரொம்ப நாளுக்குத் தெரியாமல் இருந்தது.

மார் முழுக்கச் சளி படர்ந்து இருமலுக்குக் கூட தெம்பில்லாமல் தவித்து மிகவும் சிரமப்பட்டார் தாத்தா. அந்த தங்க பித்தான் சட்டைக்கு மேலே கம்பளிச் சட்டை போட்டு காதை மறைத்து கம்பளித் துண்டு கட்டியிருந்தாலும் கூட அவரால் குளிரைச் சமாளிக்க முடியவில்லை.

உடல் ஒருபக்கம் படுத்தி எடுக்க மனதை வருத்தும் விதமாக மருமகன்கள் இருவரின் அடுத்தடுத்த மரணம் தாத்தாவை இன்னும் பலவீனமாக்கியது. சம்பிரதாயம் என்ற பெயரில் மகள்கள் அணிந்திருந்த வெள்ளைச் சேலை இருவரையும் உலுக்கி விட்டது. படுக்கையே வீடானது தாத்தாவுக்கு. அவருடைய உடல் உபாதை எல்லாரையும் வருத்தியது. ஒருநாள் எல்லோர் வருத்தமும் தீர அவர் விடைபெற்றுக் கொண்டார். தாத்தாவின் காலத்துக்குப் பிறகு ஆச்சியின் கோலம் வெள்ளையாகி விட்டது.

தொடர்ந்த வாழ்வில் மருமகப் பிள்ளைகளின் அடுத்தடுத்த மரணங்கள் நிகழ்ந்த போதே மரணம் குறித்த அவள் சிந்தனை விரிந்திருக்க வேண்டும். தாத்தாவின் மரணம் அந்தச் சிந்தனையை இன்னும் ஆழமாக்கியது. மூத்த மருமகனில் தொடங்கிய வரிசை எதிர்பாராத தருணங்களில் அடுத்தடுத்த மருமகன்களின் உயிரில் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆச்சியும் சிந்தனையின் ஆழங்களுக்குச் சென்று கொண்டே இருந்தாள். துக்கம் என்றாலும் மகிழ்ச்சி என்றாலும் சின்னதாகக் கண்கள் கசியும்… அவ்வளவுதான் என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டாள் ஆச்சி.

பிள்ளைகளின் வளர்ச்சி… பேரக் குழந்தைகளின் கல்யாணம் என்று பலதும் பார்த்து ஓய்ந்து வாழ்க்கையின் இறுதிக்கு வந்துவிட்டாள் ஆச்சி. இந்த காலகட்டத்தில் அவள் சிந்தனை சலனமில்லாத ஆழத்துக்குள் சென்றுவிட்டது. பேச்சு குறைந்து எல்லாவற்றையுமே வேறு உலகத்தில் இருந்து பார்க்கும் பார்வையுடனே அணுகத் தொடங்கினாள்.

ஆச்சிக்கு உடலும் நலிந்து விட்டது. ஒருநாள் அழைத்து, நாளைக்கு விடியக் காலைல எல்லாப் படத்துக்கும் பூப் போட்ருங்க… வெளக்கு எல்லாம் தேய்ச்சு வைச்சிருங்க… சக்கரப் பொங்கலு வெச்சிருங்க… என்றெல்லாம் சொல்லிவிட்டு, கட்டில் வேண்டாம்… படுக்கைய தரையில கிழமேலா விரிச்சுப் போடுங்க என்று சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கிறாள். எல்லோரும் விசும்பி அழ, யாரும் அழப்படாது… நா ஒண்ணும் கையிலயும் இடுப்புலயுமா நண்டு சிண்டுகள விட்டுட்டுப் போவல… எல்லாம் அனுபவிச்சுட்டுதான் போறேன்… சுத்தியிருந்து எல்லாரும் ஓம் நமச்சிவாய சொல்லுங்க… போற வழிக்கு கேட்டுகிட்டே போறேன்… என்றவள், தூங்குவது போல கண்களை மூடிக் கொண்டாள்.

சொன்னது போலவே ஊரே கூடி எல்லோரும் ஓம் நமச்சிவாய பாட, சிரித்த முகத்தோடு இந்த உலகை விட்டு விடைபெற்றுச் சென்றாள், டிரைவர் வீட்டு ஆச்சி என்று அழைக்கப்பட்ட, சுளுக்கு தடவுத ஆச்சி என்று அழைக்கப்பட்ட, தொக்கம் எடுக்க ஆச்சி என்று அழைக்கப்பட்ட, பொன்னம்மா ஆச்சி!

Monday, May 9, 2022

எவர் பொருட்டு..?!

 மதுரை ரயில் நிலையத்தின் உள்ளே நுழையும்போது வெக்கை தாளாமல் உடலில் வியர்த்துக் கொட்டியது. கண் எதிரே செங்கோட்டை லோக்கல் நிற்பதைப் பார்த்ததும் சின்ன ஆறுதல் வந்தது. டிக்கெட் கவுண்டரில் கூட்டம் குவிந்திருக்க பதினேழாவதாகவோ இருபத்து மூன்றாவதாகவோ போய் வரிசையில் நின்றேன். அனிச்சையாக என் கண் மொபைலைப் பார்த்தது.

‘இன்னும் அரைமணி நேரம் இருக்கு ரயில எடுக்க… அதுக்குள்ள டிக்கெட் வாங்கிரலாம்…’ என்றார் எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பாட்டையா. இது அவர் எனக்கு சொன்ன சமாதானமா இல்லை அவருக்கே சொல்லிக் கொண்டதா என்று தெரியவில்லை.

என்னிடம் இருந்த போனை கொஞ்சம் விநோதமாகப் பார்த்தார். ‘இது போனா..?’ என்றார்.

‘ஆமா பாட்டையா… இங்கன நிக்கயிலயே யார்ட்டனாலும் பேசலாம்… வீட்டுல இருக்கும்லா கறுப்பு கலர்ல… அது கணக்கா…’ என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ‘அப்படி போடு போடு…’ என்று ரிங் டோன் ஒலித்தது. பாட்டையா பக்காப்படிக்கு முக்காப்படி கொள்ளும் சட்டைப் பைக்குள் கையை விட்டுத் துழாவி ஒரு மொபைலை எடுத்தார். என்னைப் பார்த்துக் கொண்டே அதன் பச்சை பட்டனை அழுத்தினார்.

‘என்னட்டி… இடம் கிடச்சுட்டா… துண்டப் போட்டு இடம் புடிச்சுக்கோ… இன்னொரு ஆளுக்கும் இடம் புடிக்கணும்… நல்லா சாஞ்சு இரு… வேணும்னா படுத்துக்கோ… சரி… வச்சுருதேன்…’ போனை கையில் எடுத்து பார்த்துவிட்டு சிவப்பு பட்டனை அழுத்திவிட்டு மறுபடியும் பைக்குள் போட்டுக் கொண்டார்.

‘தெங்காசி வரைக்கும் நட்டாமாவே நிக்க முடியுமா… ஆமா… தெங்காசிதான போறிய… நாங்க சங்கரங்கோயில்… ஆளான்னா கூட நின்னுரலாம்… எஸ்டேட்ல இல பறிக்கவோ மாரி முதுகுல மூட்டை சொம வெச்சிருக்கிய… அதான் கிழவிட்ட சொல்லி உங்களுக்கும் இடம் போடச் சொன்னேன்…’ பேசிக் கொண்டே முன்னால் நகர்ந்தார் பாட்டையா.

ஒருபக்கம் வரிசை நகர்ந்து கொண்டிருக்க இன்னொருபக்கம் கண்ணெதிரே ரயில் ஆட்களால் நிரம்பிக் கொண்டிருந்தது. பாட்டையா என்னைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கவுண்டர் வரை இழுத்துச் சென்றார். அவர் கையில் இருந்த குடை வெயிலுக்காகவா இல்லை மழைக்காகவா என்று யோசித்துக் கொண்டே நான் முன்னகர அது அவருக்கு நடைக்கு உதவும் குச்சி என்பது நகர்தலில் தெரிந்தது.

இருவரும் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு பிளாட்பாரத்தினுள் நுழைந்தோம். பாட்டையா  மிக சுவாதீனமாக பைக்குள் இருந்து மொபைல் போனை எடுத்து ஐந்து என்ற எண்ணை அழுத்தி காதில் போனை வைத்தார். சில நொடிகளுக்குப் பின் எதிர்முனை எடுக்கப்பட கத்தி பேசத் தொடங்கினார்.

‘ஏட்டி… டிக்கெட் எடுத்துட்டேன்… எங்கன இருக்க…?’

பாட்டையா காதுகளைத் தாண்டி ஆச்சியின் குரல் கேட்டது.

‘ரயில்லதாம்பா இருக்கேன்…’

‘கண்டார ஓழி… நல்லா வந்திரும் வாயில… ரயில்ல இருக்காம வேற எங்கன இருப்ப… எந்தப் பெட்டில இருக்கனு சொல்லுட்டி…’

’அதா… இந்தா… சந்திப்புனு போட்ருக்கும்லா… அதுக்கு எதுத்தாப்ல…’

‘சவத்து மூதி… உன்ன மாரி ஒரு ஒண்ணுக்குமத்தவள கொண்டாந்து எந்தலைல கட்டுனானே எங்க மாமன்… அவனச் சொல்லணும்… இந்த டேசன் முழுக்க சந்திப்புனுதாம்டி போட்ருக்கும்… எங்கன இருக்க..?’

அவர் குரல் பதற்றமாகிவிட நான் சற்று எட்டிப் பார்த்தேன்… தூரத்தில் மஞ்சள் மின்னும் போர்டில் மதுரை சந்திப்பு என்ற எழுத்துகள் கண்ணில் பட்டன.

‘பாட்டையா… அந்த போர்டு கிட்ட போய்ப் பாப்போம்…’ பாட்டையாவால் வேகமாக நடக்க முடியவில்லை. ஆனாலும் ரயில் புறப்பட்டுவிடுமோ என்ற பதற்றம் அவரை இழுத்துக் கொண்டு வந்தது. அந்த பெட்டியில்தான் ஆச்சி இருந்தார். அரக்கப் பறக்க ஏறி ஆச்சியை இடித்துக் கொண்டு உட்கார்ந்தார். நான் மெதுவாக அருகில் செல்ல ஆச்சியை தள்ளி உட்காரச் சொல்லி எனக்கும் இடம் தந்தார்.

‘சார்வாள் தெங்காசி போறாவோ… ரொம்ப ஒவ்வாரம்… அவாள் இல்லைன்னா உன்ன கண்டுபுடிக்க சங்கடப்பட்ருப்பேன்…’ என்றார் பாட்டையா. மஞ்சள் போர்டைக் காட்டியதைத் தவிர வேறெதுவும் செய்யாத எனக்கு அவருடைய வார்த்தைகள் குத்தலாக இருந்தன.

’இடம் புடிச்சு வச்சதுக்கு நன்றி ஆச்சி…’ என்றேன். ஆச்சி காவிப் பல் சிரிப்போடு அதை ஏற்கும் நொடியில் உள்ளே புகுந்து தட்டி விட்டார்.

‘சார்வாள்… நீங்க வேற… அவ என்ன சீட்ட தலையிலயா வச்சு தாங்குனா… ஒரு ஆளுக்கு இடம் புடிச்சு குடுத்ததெல்லாம் பெருசா பேசுதிய…’ என்றவர், மனைவி பக்கம் திரும்பி, ‘ரயிலேறிட்டோம்னு உம் மவனுக்கு தாக்கல் சொல்லிரு… மருமவட்ட சொல்லி ராத்திரிக்கு சோறு வடிக்கச் சொல்லிறச் சொல்லு…’ என்று அடுத்தடுத்து கட்டளைகளைப் போட்டுவிட்டு காலை நீட்டி, கண்ணை மூடிக் கொண்டார்.

ஆச்சி கையில் இருந்த ஒயர் கூடைக்குள் கையை விட்டு தேடி சுருக்குப் பையை எடுத்து உள்ளே இருந்து ஒரு போனை எடுத்தாள். மூன்றாம் எண்ணை அழுத்தி காதில் வைத்தாள்.

‘ஐயா ராசா… நீ சாப்டியா… இல்லையா… சரி நீ சாப்டுரு… நாங்க வண்டி ஏறிட்டோம்… எங்களுக்கு செவாமிய பொங்கிறச் சொல்லு… ஒங்கப்பாவுக்கு மேலுகாலுக்கு இதமா ஒரு கரண்டி மொளவு ரசம் வைக்கச் சொல்லு… நான் மத்தியான குழம்ப ஊத்திகிடுவேன்… சரிப்பா… நான் வெச்சுருதேன்…’ போனை அணைத்து மறுபடியும் சுருக்கு பைக்குள் போட்டு அதை ஒயர் கூடைக்குள் போட்டு காலுக்கு இடையே வைத்துவிட்டு என்னைப் பார்த்து சிரித்தாள்.

‘எப்படி ஆச்சி மகனுக்கு பாட்டையாவுக்கு எல்லாம் போன் பண்ணுதே..?’ என்றேன்.

மறுபடியும் தேடி போனை எடுத்தாள். ஐந்தாம் நம்பரைக் காட்டி, ‘இத அமுக்குனா அய்யாவுக்கு பேசலாம்… இதை அழுத்துனா மவனுக்கு பேசலாம்… இதை அழுத்துனா மவ புள்ள பேரன் கிட்ட பேசலாம்… அவந்தான் சொல்லிக் குடுத்தான்…’ என்றாள். என்னிடம் சொல்லும்போது ஐந்தாம் நம்பர் பட்டனை அழுத்திவிட்டாள் போலும்… பாட்டையா போன் அடித்தது. ஆச்சி அதை கவனிக்காமல் போனை மறுபடியும் சுருக்கு பையினுள் போட்டு கூடைக்குள் போட்டுவிட்டாள்.

கண் மூடியிருந்த பாட்டையா எடுத்துப் பார்த்துவிட்டு காதில் வைத்தார். அவர் பேசும் அலோ அவருக்கே கேட்டிருக்க வேண்டும்.

‘ஏட்டி… நீயா எம் போனுக்கு போட்ட…’ என்றார்.

ஆச்சி பதற்றத்தோடு போனை எடுத்து சிவப்பு பட்டனை அழுத்தினாள்.

‘தம்பிட்ட எப்டி போன் பேசணும்னு சொல்லி காட்டுனேன்… உங்களுக்கு லைன் போயிட்டு…’ என்று சிரித்தாள்.

‘இப்படி கண்ட நம்பருக்கும் போடு… என் சொத்தெல்லாம் ரீசார்ஜ் பண்ணியே ஜப்தி ஆவப் போவுது…’ என்று சலித்துக் கொண்டார். என்பக்கம் திரும்பினார்.

‘பாத்தேளா சார்வாள்… எலிக்கு பவுசு வந்தா எலிகாப்டர் கேக்கும்னு சும்மாவா சொன்னான்… அவ ஒங்களுக்கு போன் போடச் சொல்லித் தாராளாம்… ஏட்டி… சார்வாள் வச்சிருக்க போன நீ பாத்துருக்கியா… அவாள் அதுல அமெரிக்கா காரன்கூடல்லாம் பேசுவாவோ… நீ அவாளுக்கு சொல்லித் தாரியோ… போக்கத்த பயவுள்ள…’ என்றவர் மறுபடியும் கண்ணை மூடிக் கொண்டார்.

ஆச்சி ஆச்சரியமாக என்னைப் பார்க்க, நான் என் பையில் இருந்த போனை எடுத்துக் காட்டினேன். ரேகை பதித்தால்தான் திறக்கும் என்று நான் சொன்னதும், ‘என்னப் போல கைநாட்டு கேசுகளுக்குனு கண்டுபுடிச்சிருக்கான் போலுக்கு…’ என்றாள் ஆச்சி வெள்ளந்தியாக! அவள் கையில் கொடுத்தேன். வெற்றிலை தடவிச் சிவந்த தன் விரல்களால் அதை ஆசைதீர தடவிப் பார்த்தாள்.

‘இதுல போட்டோ புடிக்கலாமாய்யா..?’ என்றாள்.

‘புடிக்கலாம்ச்சி… உன்னைய புடிக்கட்டுமா...?’ என்று கேமராவை ஆன் செய்தேன்.

‘நம்மள ரெண்டு பேரையும் புடிக்காப்ல இருக்கா… என் பேரன்… இந்தா இப்படி கைய உசக்க வெச்சுகிட்டு பாரு ஆச்சினு புடிப்பான்…’ என்றாள் சிரிப்போடு.

நான் போனை செல்ஃபி மோடுக்கு மாற்றி கையை உயர்த்தி இருவரையும் கவர் செய்தேன். செல்போனில் தெரிந்த அவள் முகம் அவளுக்கே புதிதாக இருந்திருக்க வேண்டும். இன்னும் மலர்ந்து சிரித்தாள்.

மறுபடியும் கூடையில் தேடி சுருக்குப் பையில் இருந்து போனை எடுத்து என்னிடம் தந்தாள். ‘அந்த போட்டாவ இந்த போனுக்கு அனுப்ப முடியுமா…?’ என்றாள்.

‘இல்ல ஆச்சி… உன் பேரன் நம்பர் சொல்லு… அவனுக்கு அனுப்பிருதேன்… அவன பிரிண்ட் போட்டு தரச் சொல்லு…’ என்றேன். நானே அவள் மொபைலில் இருந்து பேரன் எண்ணை குறித்துக் கொண்டேன்.

வண்டி விருதுநகருக்குள் நுழைந்தது. பாட்டையாவை உலுக்கி எழுப்பினாள் ஆச்சி.

‘அய்யா… விருதுநகர் வந்தா சொல்லுனியளே… வந்துட்டுனு நினக்கேன்…’

பாட்டையா பரபரப்பாக இங்கும் அங்குமாகப் பார்த்தார். சரக்கென்று வேட்டியை விலக்கி அண்டர்வேரில் இருந்து இருபது ரூபாய் நோட்டை எடுத்தார். பிறகு அதை வைத்துவிட்டு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்தார்.

‘சார்வாள்… லேசா எட்டி பால்காரன் வாரானானு பாருங்க… இங்க பால் நல்லாருக்கும்… மூணு பேருக்கும் வாங்குவோம்…’ என்றார்.

‘இல்ல பாட்டையா… நான் பால் சாப்ட மாட்டேன்… ரெண்டு வாங்குவோம்…’ என்று பால் விற்றவரை அழைத்தேன்.

இரண்டு கைகளிலும் இரண்டு கப் பாலை நான் வாங்க பாட்டையா டக்கென்று ரூபாயை எடுத்து கொடுத்துவிட்டார்.

‘ஏட்டி… வெத்தல எச்சியோடயா பால குடிப்ப… போய் வாய கொப்ளிச்சுட்டு வா… ஒண்ணுக்கு போணும்னாலும் போயிட்டு வா…’ என்றார்.

ஆச்சி நகர்ந்ததும் என்னிடம் கிசுகிசுப்பான குரலில் சொன்னார்.

‘நானும் பால் குடிக்க மாட்டேன்… இவ பசி தாங்க மாட்டா… ஒரு வாய் குடிச்சுக்கோன்னா வேண்டாம்னு நிலையா நிப்பா… அதான் எனக்குனு சொல்லி வாங்கி குடுக்கேன்… இத கொஞ்சம் போல குடிச்சுட்டு அவட்டயே குடுத்துருவேன்… சேத்து குடிச்சுருவா…’ என்றார்.

வண்டி நகர ஆச்சி வந்து அமர்ந்து நிதானமாக இரண்டு கப் பாலையும் ஊதி ஊதி குடித்தாள்.

‘சரி… செத்தோடம் கண்ண மூடு… ராஜாளயம் தாண்டி முழிச்சா போதும்…’ என்று தானும் கண்ணை மூடிக் கொண்டார் பாட்டையா! அவர்களை தொந்தரவு செய்யாமல் நானும் நகர்ந்து வாசல் பக்கமாக வந்து நின்று கொண்டேன்.

வாசலை ஒட்டிய இருக்கைகளில் இளைஞர் கூட்டம் ஒன்று அமர்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தது. விருதுநகரில் ஏறிய போளி வியாபாரி, ‘சூடான கடம்பூர் போளீய்…’ என்று கூவிக் கொண்டிருந்தார்.

சீட்டாட்ட கும்பலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் சட்டென்று எழுந்து தலையை எண்ணி போளி வாங்கினார். சீட்டாடியவர்களுக்கு ஆளுக்கொன்றாகக் கொடுத்துவிட்டு தனக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு என்னிடம் ஒன்றை நீட்டினார்.

‘இல்ல… நான் இதெல்லாம் சாப்டுறதில்ல…’ என்று மறுத்தேன்.

‘அட… என்னண்ணே நீங்க… ஒரு போளி சாப்டா என்ன வயிறா ரொம்பிடும்… சாப்டுங்க… இன்னிக்கு எனக்கு பர்த் டே… அதான் எல்லாருக்கும் ஸ்வீட் வாங்குனேன்… சாப்டுங்க…’ என்று நீட்டினார்.

சன்னமாக குரலில் ஹேப்பி பர்த் டே என்று சொல்லிவிட்டு போளியை பிட்டு வாயில் போட்டேன்.

‘நல்லாருக்குல்ல… எங்கே… குத்தாலம் குளிக்கப் போறீங்களா..?’ என்றார்.

‘இல்ல… ஊரே அதுதான்… தங்கச்சி மக கல்யாணம்… அதுக்கு போறேன்…’ என்றேன்.

‘நாங்க சின்னாளபட்டி… குத்தாலம் குளிக்கப் போறோம்… வருசத்துக்கு ஒரு ட்ரிப் இப்படி கிளம்பிடறது… நமக்கும் ஒரு சேஞ்ச் வேணும்ல…’ என்றார்.

‘ஓ… எல்லாம் தறி ஓட்றீங்களா..?’ என்றேன்.

‘சின்னாளபட்டின்னா சுங்குடி… ஊரெல்லாம் தறிங்கறது அந்தக் காலம்… இப்ப எல்லாம் மாறிப் போச்சு… நூத்துக்கு பத்து பேரு தறி ஓட்டுனா பெருசு… ஆளுக்கொரு வேலையப் பார்க்கப் போயிட்டோம்… இவனுக எல்லாரும் திண்டுக்கல்ல வேற வேற இடங்கள்ல வேல பாக்காங்க…’ என்றார்.

‘நீங்க..?’

‘நான் ஊர்தான்… அக்ரிகல்ச்சர்… சொந்தத் தொழில் பார்க்க முடியலனாலும் சந்தோஷமா இருக்கேன்… நீங்க போளி சாப்டுங்க…’ என்றார்.

‘ஆக்சுவலி இன்னிக்கு உங்களுக்கு பொறந்தநாள் இல்லைதானே..?’ என்றேன். சிரித்துக் கொண்டே போய் கூட்டத்தோடு அமர்ந்து கொண்டார். வெளியே திரும்பிப் பார்த்தேன். ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தூரமாக மின்னியது. மறுபடியும் சீட்டுக்கு வந்தேன்.

பாட்டையா எல் உடல் பட்டு விசுக்கென்று விழித்தார்.

‘ராஜாளையம் வந்துட்டா..?’ என்றார்.

‘வரப் போவுது… நீங்க படுங்க… நான் சங்கரன்கோயில் வந்ததும் எழுப்புதேன்…’ என்றேன்.

‘நல்ல காரியத்த கெடுத்திய… நான் ராஜாளையத்துல ரெடியானாத்தான் சங்கரங்கோயில்ல இறங்க முடியும்… அசைஞ்சு அசைஞ்சு நடக்கணும்லா…’ என்று சிரித்துக் கொண்டே ஆச்சியை எழுப்பினார்.

‘ஏட்டி… இறங்கணும்… எந்திரி…’ ஆச்சியும் எழுந்து உட்கார்ந்தாள். தலையை உதறி முடியை நீவி கொண்டையாக முடிந்து கொண்டாள். சீட்டுக்கு கீழே இருந்த பைகளை எடுத்து ஒழுங்கு படுத்தி வைத்தாள்.

ராஜபாளையத்தில் பரபரவென்று ஒரு பெண்கள் கூட்டம் ஏறியது.

‘ஏட்டி… இடமே இல்லயே… நிக்கத்தான் செய்யணுமோ…’ என்றாள் ஒருத்தி. பாட்டையா அவசரமாக, ‘நாங்க சங்கரங்கோயில்ல இறங்கிருவோம்… நீங்க இருந்துக்கங்க…’ என்றார். அந்தப் பெண்களும் சமாதானம் ஆனார்கள்.

சங்கரன்கோவில் வந்ததும் பைகளை நகர்த்தி வாசலுக்கு கொண்டு போய்க் கொடுத்தேன். ‘ரொம்ப தேங்க்ஸ் சார்வாள்…’ என்று அகலமாகச் சிரித்து விடைகொடுத்தார் பாட்டையா. ஆச்சிக்கும் சிரிப்பு அள்ளிக் கொண்டு வந்தது. வண்டி நகர மறுபடியும் இருக்கைக்கு வந்தேன்.

புதிதாக இடம் பிடித்தவர்கள் பைகளை விரித்து சேலைகளைப் பரப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

‘ஏட்டி… அவங் கடையில பாக்கையில ஒரு கலரா தெரியுது… ஆசையா எடுத்தேன்… இப்பம் பாத்தா வேறயா இருக்கே…’ என்றாள் ஒருத்தி.

‘எல்லா சீலையும் அப்டிதான் இருக்கும்… பகல் வெளிச்சத்துல பாரு… இன்னொரு கலர் தெரியும்…’ என்றாள் உடனிருந்தவள்.

அவள் சொன்னதற்கு ஆதரவு தெரிவிப்பது போல கைதட்டல் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தால் திருநங்கை ஒருத்தி கைதட்டி யாசகம் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒன்றும் ரெண்டுமாக எல்லோருமே காசு கொடுக்க வாங்கி வாங்கி இடுப்பில் செருகிக் கொண்டே வந்தாள். என்பங்குக்கு நானும் காசு கொடுத்தேன். சேலையை சிலாகித்தவளும் கொடுத்தாள். அதையும் வாங்கி இடுப்பில் செருகினாள் திருநங்கை.

அதைப் பார்த்ததும் சேலை எடுத்தவளுக்கு சுறுசுறுவென்று வந்துவிட்டது.

‘அடி பாவிமட்ட… துட்ட இடுப்புல சொருவுதேன்னு தொலச்சுட்டு போயிறாத… வம்பாடு பட்டு சம்பாதிக்க… வச்சு செலவழிக்க வேண்டாம்… ஒரு நிமிசம் நில்லு…’ என்று பரபரவென்று ஜவுளிக்கடை கட்டைப் பைக்குள் தேடி ஒரு பர்ஸை எடுத்தாள். கடையில் கொடுத்த புத்தம் புது பர்ஸ்…

‘இந்தா… துட்ட இதுல போட்டு ஜாக்கெட்டுக்குள்ள வை… ‘ என்று கொடுக்க, திருநங்கை மொத்த காசையும் இடுப்பில் இருந்து எடுத்து பர்ஸ் உள்ளே போட்டுவிட்டு பர்ஸுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். பர்ஸ் கொடுத்தவளையும் கன்னம் கிள்ளி முத்தினாள்.

‘என் செல்ல அக்கா…’

உடன் வந்தவளுக்கு பொசபொசவென்று ஆகிவிட்டது.

‘அடேய்… பத்து ரூவா குடுத்த எங்கள கண்ணு தெரியல… ஓசி பர்ஸு குடுத்தவ ஒனக்கு உடம்பொறந்தாளா போயிட்டா..? நல்லருக்கிட்டி நாயம்..?’ என்றாள்.

திருநங்கை வெடுக்கென்று வெட்டித் திரும்பினாள்.

‘இங்காருக்கா… நீ குடுத்த பத்து ரூவா ஒரு டீ காசு… குடிச்சுட்டு ஒண்ணுக்கு போயிட்டம்னா ஒண்ணுமில்லனு போயிரும்… ஆனா, இந்த பர்ஸு கிழிஞ்சு நூலாவும்தண்டியும் இந்த அக்கா நெனைப்பு இருக்கும்… இது ஒண்ணும் ஓசி பர்ஸு இல்ல… சீலைக்கு குடுத்த காசுல இதுக்கும் சேர்த்துதான் எடுத்துருப்பான் கடைக்காரன்…’ சொல்லிவிட்டு கைகளைத் தட்டிக் கொண்டு அடுத்த சீட்டுக்கு நகர்ந்தாள் அவள்.

தென்காசியில் வண்டி நிற்கும்போது இறங்க வழியில்லாமல் கொட்டியது மழை!

விகடன் தீபாவளி மலர் 2018

(இலக்கியச் சிந்தனை 2018ம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை பரிசு பெற்றது)

Sunday, February 13, 2022

கடைசி (வீட்டு) விவசாயி!

 




தர்மர் தாத்தா… எங்க ஊர்ல (கொட்டாகுளம் – தென்காசி மாவட்டம்) எங்க தெருவுல கீழக் கடைசியில இருக்க வீடு அவரோடதுதான்… பங்கு பாகமெல்லாம் பிரிச்சது போக அவருக்கு கிடைச்சது ஒரு குச்சிலும் கையகல நிலமும்தான்.

எல்லாரும் நாத்தங்கால்னு சொல்றதைத்தான் தருமரு வயலும்பாரு… அவருக்குக் கிடைச்சது அம்புட்டுதான் என்ன செய்ய..? என்றுதான் ஊருக்குள் பேசிக் கொள்வார்கள்.

ஆனால் ஒரு கோட்டை விதைப்பாடு நிலம் வைத்திருப்பவர் கூட அத்தனை அக்கறையாக வயலுக்குப் போக மாட்டார்கள். தினமும் காலையில் களைகொத்தியோடு வயலுக்கு கிளம்பிவிடுவார்.

நாற்று பாவுவதில் தொடங்கி களை எடுப்பது, உரம், பூச்சி மருந்து போடுவது என்று போய் அறுவடை செய்வது வரை தாத்தாவும் அவர் வீட்டு ஆச்சியும்தான் எல்லா வேலைகளையும் செய்வார்கள்.

எங்கள் ஊருக்கே விவசாயத்துக்கு தண்ணீர் வருவது மேற்கே இருக்கும் கண்ணுப்புளி மெட்டு அணையில் இருந்துதான்! வயல் வைத்திருப்பவர்கள் வீட்டுக்கு ஒரு ஆள் தண்ணீர் அடைக்க வரவேண்டும் என்பது ஊர்க்கட்டுப்பாடு. தலைப்பாகையை இறுகக் கட்டிக் கொண்டு முதல் ஆளாக வந்துவிடுவார். தாத்தா, சின்னப் புள்ள ஒண்ணுக்கு இருந்தா மறுகால் வெட்டி விடணும்… அந்த வயலுக்கு நீங்க எதுக்கு அலையறீங்க..? என்றால், என்னப்பா… ஊருக்கு ஒத்தது எனக்கும்… வயல்காரங்க வாங்கன்னா வரணுமா இல்லையா..? என்பார்.

எத்தனை பஞ்சத்திலும் தன் விவசாயத்தை அவர் கைவிடவே இல்லை.

தன் ஒற்றை மகளுக்கு மாப்பிள்ளை தேடும்போது அவர் வைத்த ஒரே நிபந்தனை… என் வீட்டை எடுத்துகிடட்டும்… ஆனா, வயலை வெள்ளாமை பார்க்காம போட்டுறக் கூடாது என்பதுதான்!

கடைசி விவசாயி படத்தில் மாயாண்டி ஐயாவைப் பார்க்கும்போது தருமர் தாத்தாதான் நினைவுக்கு வந்தார்!

(அவரைத் தவிர ‘முருகனடிமை’ ராமையா, உப்பு தோசைகளும் எங்கள் ஊரில் உண்டு!)

நன்றி மணிகண்டன்!

Wednesday, August 25, 2021

வீடுபேறு! 16/16


D-6/4… என்னுடைய முதல் வீடு… ஆமாம்… அப்பாவின் வீடு, மாமாவின் வீடு, தாத்தாவின் வீடு என்ற அடையாளங்களுடனே வாழ்ந்த நான் சென்னைக்கு வந்த பிறகு பல வீடுகளில் தங்கியிருந்தாலும் அத்தனையுமே அறைகள்தான். யார் கேட்டாலும் நண்பர்களோடு ரூம் எடுத்து தங்கியிருக்கேன் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட எனக்கு வீடு என்ற அடையாளத்தைத் தந்தது கோடம்பாக்கம் புலியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஒற்றைப் படுக்கையறையைக் குறிக்கும் D வரிசையில் ஆறாவது பிளாக்கில் இருந்த நாலாம் எண் வீடுதான்!

ஒரு தளத்தில் நான்கு வீடுகள் இருக்கும் வகையிலான அமைப்பு கொண்டு அடுக்குமாடி கட்டடம். நான்கு வீட்டு வாசல்களும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டுதான் இருக்கும். ஒரு வீட்டு வாசலில் கோலம் போட்டால் அது அடுத்த வீட்டுக்குமான கோலமாக காட்சியளிக்கும். அந்த அளவுக்கு நெருக்கமான வாசல்களைக் கொண்ட அமைப்பு அது.

திருமணம் முடிந்த பிறகு மனைவி சீதாவை அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குத்தான் வந்தேன். நான்கு மாடிகளைக் கொண்ட அந்த ஆறாம் எண் அபார்ட்மெண்டில் தரைத் தளத்திலேயே இருந்தது நாலாம் எண் வீடு! அலுவலக நண்பர் வேல்ஸ்-க்கு சொந்தமான வீடு.

வீட்டில் பெண் பார்க்கலாமா என்று கேட்டநாளில்தான் வேல்ஸ் வீட்டில் குடியிருந்தவர் காலி செய்து கொண்டு போனார். (இரண்டும் தனித்தனி சம்பவங்கள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லை) கல்யாணமானால் வீடு வேண்டுமே என்ற முன்னேற்பாட்டுடன் அதை மடக்கிப் பிடித்துவிட்டேன்.

வீடு நண்பர் வேல்ஸ்- உடையது என்றாலும் நான் வாடகையை எல்.ஐ.சியில்தான் செலுத்திக் கொண்டிருந்தேன். அந்த நிறுவனத்தில்தான் வீட்டுக் கடன் வாங்கியிருந்தார் அவர். நான் அந்த வீட்டைக் காலி செய்யும் வரையில் வெளியில் விலை வாசியும் வாடகை நிலவரமும் ஏறியிருந்தாலும் கடைசி வரையில் கடனுக்கான இ.எம்.ஐ என்னவோ அதைத்தான் வாடகையாகக் கட்டி வந்தேன்.

நான் அந்த மாத வாடகையை இ.எம்.ஐ-யாகக் கட்டினேனா என்பதைப் பற்றிக்கூட கேட்க மாட்டார். சில மாதங்களில் தவற விட்டு சேர்த்து அடுத்த மாதத்தில் கட்டியிருக்கிறேன். அவருடைய கணக்குக்காக ரசீதுகளை மட்டும் கொடுத்துவிடுவேன்.

ஒருகட்டத்தில் நானே இ.எம்.ஐ கட்டி அந்த வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளப் போவது போன்ற தோற்ற மயக்கத்தில் இருந்தேன். அந்த அளவுக்கு சொந்த வீட்டின் உணர்வைத் தந்த வீடு அது!

மேலே சொன்னது போல ஒற்றைப் படுக்கையறைதான் வீடு… நுழைந்தவுடன் ஒரு ஹால்… அதில் உள்ள ஒரு வாசலில் நுழைந்தால் அடுக்களை… இன்னொரு வாசலில் நுழைந்தால் படுக்கையறை..! கழிவறையும் குளியலறையும் தனித்தனியாக ஹாலில் இருந்து செல்லும் வகையில் அமைந்திருக்கும். இந்த வசதிதான் இந்த வீட்டின் சிறப்பு.

விருந்தினர்கள் வந்திருந்தாலும் கூட ஹாலில் படுத்திருப்பவர்கள் இரவு நேர இயற்கை உபாதைகளுக்காக படுக்கையறைக் கதவைத் தட்ட வேண்டிய தேவை இல்லை. பல நாட்களை விருந்தினர்களோடு கழித்த எங்களுக்கு இது பெரும் வசதியாக இருந்தது.

இரட்டைப் படுக்கை அறைகளைக் கொண்ட சி வகையில் பல பிளாக்குகள், ஒற்றைப் படுக்கையறை கொண்ட டி வகையில் பல பிளாக்குகள், ஒற்றை அறை வீடான ஈ வகையில் பல பிளாக்குகள் என்று ஒரு கிராமம் அளவுக்கு குடும்பங்களால் நிறைந்திருந்த குடியிருப்பு அது!

பாஸ்கர் சக்தி, யுகபாரதி, ராஜூ முருகன் என்று பல நண்பர்கள் புடைசூழ குடியிருந்த குடியிருப்பு என்பதால் அந்நியமாகவே இல்லை. பழகிய இந்த நண்பர்களுக்கு நிகராக புதிதாகக் கிடைத்த ஆஷா அம்மா, சுபா அம்மா போன்ற சகோதரிகளும் அந்த நினைவுகளை இனிமையாக்கினர்.  அந்த வகையில் அந்த வீடு எப்போதுமே இல்லம்தான்!

தீபனின் படிப்புக்காக (எல்.கேஜிதான்) கோடம்பாக்கத்தில் இருந்து இடம்பெயர்ந்து வளசரவாக்கம் வந்து சேர்ந்து குடியிருந்த வாடகை வீடுகள் தந்த அனுபவம் வேறு வகை! சொந்த வீடு வாங்கும் முடிவை நோக்கித் தள்ளும் அளவுக்கு அன்பானவர்களாக இருந்தார்கள் வீட்டு உரிமையாளர்கள்.

அப்படித்தான் கிடைத்தது ஜேட் அபார்ட்மெண்ட்ஸ் என்ற குடியிருப்பில் உள்ள வீடு! ஆதார் கார்டில் இடம் பிடித்து அசைக்க முடியாத அடையாளமாகி இருக்கும் அந்த வீடுதான் பத்தாண்டுகளுக்கும் மேலாக என் விலாசம். இரட்டைப் படுக்கையறை, இரண்டிலும் தனித்தனியே பாத்ரூம்கள் என்று வசதிக்குக் குறைவில்லை.

இந்தப்பக்கம் ஆறு, அந்தப்பக்கம் ஆறு என்று இரண்டு பிளாக்குகளில் 12 வீடுகள்… ஆனால், 12 வீடுகள் என்பதைவிட 12 க்தவுகள் என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் மூடிய கதவுகள்தான் கண்ணில் படும். நகரத்தில் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் கதவுகள் அவை!

மூடிய கதவுகளுக்குள் அன்பும் அரவணைப்புமாக இருந்தாலும் கூடி வாழும் இயல்பினனான எனக்கு மூடிய கதவுகள் மூச்சு முட்ட வைக்கின்றன.

சிறிய சன்னல் திறப்பு போல 12ல் ஒரு வீடு மட்டுமே உறவு போல போய் வரும் அளவுக்கு உரிமை கொடுத்திருக்கிறது. ஒரு வெப் சீரிஸே எடுக்கும் அளவுக்கு அழகழகான கதைகள் கொண்ட சகோதரிகள் அம்மாவோடு வாழும் வீடு..! அந்த வீட்டில் இப்போதைய புதிய வரவு நோயல் (இன்னும் ஒரு வயதைத் தொடாத குட்டிப் பயல்) வீட்டை இன்னும் அழகாக்கி இருக்கிறான்.

இதுவரையில் சொன்ன எத்தனையோ வீடுகளில் என் வேர்களைப் பரப்பியிருப்பதால் இந்த வீட்டில் என்னால் நிலை கொண்டிருக்க முடிகிறது.

ஏனென்றால் வீடு என்பது வெறுமனே வீடு மட்டுமல்ல!

அன்பும் நன்றியும்..!