Tuesday, February 25, 2014

எனக்கு வேலை போய்விட்டது - 02

சீக்கிரம் வாய்யா... ஆளெல்லாம் காத்துகிட்டிருக்கில்லா...’ என்று தலையில் வைத்து தூக்கிக் கொண்டு செல்லாத குறையாக வயலுக்கு கூட்டிக் கொண்டு போவார்கள். தளதளவென்று கலங்கி நிற்கும் தொழி(சேறு)யில் எல்லாம் தயாராக இருக்க, நான் கம்பீரமாகப் போய் வயலில் இறங்குவேன்.
‘நல்லா சாமியக் கும்பிட்டுக்கோ... இந்தா..’ என்று ஒரு கொட்டானைக் கையில் கொடுப்பார்கள். அதற்குள் இடதுகையை விட்டு கைநிறைய விதை நெல்லை அள்ளி அப்படியே வயலில் தூவுவேன்.
சின்னவன் கையால விதை நெல்ல அள்ளி வீசுனம்னா ரெண்டு போகம் செழிக்க செழிக்க வரும்லா...’ என்று என்னை உச்சி மோந்து முத்தமிட்டு வீட்டுக்குக் கூட்டி வருவார்கள். அதேபோல அறுவடை நாளிலும் முதல் கதிரை அறுத்து அறுவடையைத் தொடங்கி வைப்பேன். அப்பேர்ப்பட்ட ராசிக்காரன் நான். அப்படி இருக்கும்போது படித்து முடித்துவிட்டு சும்மா இருக்கலாமா..?
‘அப்பா... நான் விவசாயம் பாக்கலாம்னு இருக்கேன்...’ என்ற என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார் அப்பா. ‘அதுல உனக்கு என்னடே தெரியும்... பம்பு செட்ல குளிக்கதத் தவிர்த்து எதுக்கும் நீ போனதில்லையே..?’ என்றார். இல்லப்பா... நான் சில பிளான் வெச்சிருக்கேன்... நல்லா பண்ணிருவேன்... என்றேன்.
‘சரி, உன் பிளானச் சொல்லு..!’ என்றார் என் அப்பா. ’கார், பிசானம்... ரெண்டு போகத்துக்கும் நடுவுல இருக்கற காலத்துல சின்ன வெங்காயம் போடலாம்னு பிளான்... நல்லா வரும்...’ என்று நானே சொன்னேன். இந்தப் பருவத்துக்கு சரியா வராதே என்று தயங்கினார். நம்மை விவசாயியாக ஆகவிடாமல் தடுக்க திட்டமிடுகிறார் என்று எண்ணிய நான் உறுதியான குரலில், எல்லாம் சரியா வரும்பா என்றேன்.
சரி, உன் பட்ஜெட்டைச் சொல்லு என்றார். சொன்னேன். வங்கியிலே லோன் தர்ற மேனேஜர் மாதிரி சில பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, அப்ரூவ் பண்ணினார். பரபரப்பாக களத்தில் இறங்கினேன்.
வயலில் பாத்தி கட்டி வெங்காய விதைகளை வாங்கி பாவினேன். பம்ப் செட்டில் இருந்து தண்ணீர் பாய்ச்சி, ஊடுபயிராக காய்கறிகளெல்லாம் போட்டு பக்கா விவசாயியாகவே மாறிவிட்டேன்.
விவசாயத்தில் மட்டுமல்ல... வயலோரம் உட்கார்ந்து சாப்பிடுவது, பம்பு செட்டில் குளிப்பது, உரம் பூச்சி மருந்து என்றே பேசுவது என்|று நானும் விவசாயியாகவே ஆகிவிட்டேன்.
வெங்காயம் நல்ல பதத்துக்கு வந்துவிட்டது. மார்க்கெட்டில் விலையை விசாரித்துக் கொண்டு பிடுங்க வேண்டியதுதான் என்ற நேரத்தில் பிடித்தது மழை. வெங்காயத்தை மண்ணிலேயே விட்டால் அழுகிவிடும்... பிடுங்கி எடுத்தாலும்   விலை இல்லை... என்ன செய்யலாம் என்ற குழப்பத்தில் இருந்தேன்.
மண்ணிலே விடுவதில் பயனில்லை என்பதால் பிடுங்கிவிட்டேன். வயலை ஒட்டிய தோப்புக்குள் சாக்கு விரித்து வெங்காயத்தைக் கொட்டி வைத்தேன். ஈரம் ஒழுகிக் கொண்டிருந்தது. வியாபாரி அங்கேயே வந்து எடை போட்டு எடுத்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தார். ஈர எடையைக் கழித்து வியாபாரி சொன்ன விலையில் கொஞ்சம் மயக்கம் வந்துவிட்டது. ஆனாலும் வழியில்லை. எடைக்குப் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
அப்பா கேட்டார். கணக்குச் சொன்னேன். கூட்டிக் கழிச்சு பார்த்தால் கையில் கொஞ்சம் லாபம் நின்றது. உன் உழைப்புக்கு கூலி..? என்றார். என்னிடம் பதில் இல்லை.
சரி, அடுத்த பூவு(பருவம்)க்கு என்ன பிளான்..? என்றார். உங்க வயல்... நீங்க முடிவு பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டேன். ஒரு பருவத்து விவசாயத்திலேயே சலித்துவிட்டது.
ஆமாம்... எனக்கு வேலை போய்விட்டது!

Friday, February 14, 2014

எனக்கு வேலை போய்விட்டது! 01

பெரியவனைப் பத்தி கவலையில்லை... எப்படியும் என்ஜினியர் ஆகிடுவான். சின்னவனும் டாக்டராகிட்டாம்னா நாம கவலையத்து இருக்கலாம்...’ என்ற அப்பா அம்மாவின் ஆசையில் என் பத்தாங்கிளாஸ் மார்க் பெரிய மண்ணாக விழுந்தது. 280 மார்க்குக்கு ஃபர்ஸ்ட் குருப்பே கிடைக்காது என்ற நிலையில் அக்கவுண்டன்சி சேர்ந்தேன். அதுக்கென்ன... இதை முடிச்சா பிகாம்... அப்படியே சிஏ.. இல்லன்னாக் கூட பேங்க் எக்ஸாம் எழுதி வேலைக்குப் போயிறலாம்ல! என்று தங்கள் கனவைக் கொஞ்சம் ஆல்டர் பண்ணிக் கொண்டார்கள். அறுநூற்று சொச்சம் மார்க் எடுத்து அங்கேயும் ஒரு செக் வைத்தேன். பிஏ எகனாமிக்ஸ் கிடைத்தது.

நம்மூர்ல லாயரே கிடையாது தெரியும்ல... நம்மூர் வம்பு வழக்குகளைப் பார்த்துகிட்டு இருந்தாக் கூட நாளெல்லாம் வேலை இருக்கும்... மரியாதையான தொழில் அது என்று அவர்கள் அடுத்த கனவுக்கு போக, நான் பிஏவை இரண்டாம் வகுப்பில் பாஸ் பண்ணி அவர்களைத் திகைக்க வைத்தேன். அவர்களும் விடுவதாக இல்லை. எம்.. சேர்த்தார்கள்.

அப்படியே எம் ஏ முடிச்சு, எம்ஃபில் முடிச்சுட்டா காலேஜ்ல வாத்தியார் ஆகிடலாம். இன்னைக்கெல்லாம் என்ன மரியாதை தெரியுமா..? என்று விடாமல் விரட்டிக் கொண்டு வந்தார்கள் அம்மாவும் அப்பாவும்! எம் ஏ படிக்கும்போதே பத்திரிகை பக்கம் கவனம் திரும்ப, அதன்பிறகு தொலைதூரக் கல்வியில் சேர்ந்த எம்ஃபில் அப்படியே தொலை தூரத்திலேயே தேங்கிவிட்டது.

இவன் என்ன ஆகப் போகிறான் என்ற கவலையோடு அம்மாவும் அப்பாவும் இருக்க, நான் என்னவெல்லாமோ செய்தேன்... இன்னமும் செய்துகொண்டிருக்கிறேன்.

என்ஜினியரிங் முடித்த என் சகோதரர் என்ஐஐடியில் படித்துவிட்டு ஊரில் ஒரு கம்ப்யூட்டர் செண்டர் தொடங்க, நானும் அங்கே அவ்வப்போது தலைகாட்டத் தொடங்கினேன். அவர் கிளாஸுக்குப் போகும் நேரத்தில் செண்டரைப் பார்த்துக் கொள்வதுதான் என் வேலை. ஆனால், முதல் வேலையாக விசிட்டிங் கார்டு அச்சடித்து அந்த செண்டரில் நானும் ஓர் அங்கம் என்று காட்டிக் கொண்டேன்.

அந்தச் சமயத்தில்தான் ப்ராஜெக்ட் தயாரித்து தரமுடியுமா என்று கேட்டு கல்லூரி மாணவியர் இருவர் வர, என் சகோதரர் சின்ன யோசனையோடு இருந்தார். நான் தான், ‘ஆர்டர் எடுப்போம்... வருஷத்துக்கு ஒரு தடவை கிடைக்கற வாய்ப்பு... கிளாஸ் எடுக்கற நேரம் போக எக்ஸ்ட்ராவா இருக்கற நேரத்தில் செய்யலாமே... கூடுதலா காசு கிடைக்குமே..?’ என்றேன். ஓகே என்றார்.

பகலெல்லாம் கம்ப்யூட்டர் செண்டரில் பாடம் நடத்தும் பணி போகும். மாலையானதும் ஆளுக்கொரு கம்ப்யூட்டராக எடுத்துக் கொண்டு பசங்க ப்ராஜெக்ட் டைப்பிங்கில் இறங்குவார்கள். இதில் வசதி என்னவென்றால் பத்து பேர் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் செய்வார்கள். அதனால், ஒரே புத்தகத்தை பத்து காப்பி எடுத்துக் கொடுக்க வேண்டும்.

அதற்கென ஒரு பிராஜெக்ட் தயாரித்தோம். ஒவ்வொரு சேப்டர் தொடங்கும்போதும் ஒரு தலைப்பு இருக்கும். அதற்கு ஏற்ப ஒரு டிசைனைப் பிடித்து அதை அழகாக வடிவமைத்து ஒரே ஒரு பிரிண்ட் எடுத்து அதை பல காப்பிகள் ஜெராக்ஸ் எடுத்தோம். அங்கே கொஞ்சம் கமிஷன், புக் பைண்டிங்கில் கொஞ்சம் கமிஷன் என்று பக்காவாக பிளான் பண்ணி வேலையில் இறங்கினோம். பத்து பேருக்கு பத்து புத்தகங்கள் என்னும்போது எல்லாருக்கும் ஒரே மாதிரியான கட்டணங்கள். அதில் கொஞ்சம் கமிஷன் என்று சகல வகையிலும் திட்டம் போட்டேன்.

ஜெராக்ஸ் எடுத்துவிட்டு ஒரிஜினல் அளவுக்கு சார்ஜ் செய்தால் நியாயமா என்று கேட்ட என் சகோதரருக்கு அதெல்லாம் தொழில் தர்மம் என்று வகுப்பு எடுத்தேன். இரவும் பகலுமாக பிரிண்டிங், பைண்டிங், டைப்பிங் எல்லாம் ஓடியது. மொத்த பிராஜெக்டும் முடிந்து கணக்கு போட்டுப் பார்த்தபோது அந்த சீசனில் கணிசமான ஒரு தொகை கையில் நின்றது.

ஆனால், இந்த காலகட்டத்தில் காதில் விழுந்த ஃபாக்ஸ்ப்ரோ, லோட்டஸ், சி ப்ளஸ் போன்ற வார்த்தைகளும் அதற்கான குறியீடுகளும் மண்டையைச் சூடாக்கியிருந்தது.

அடுத்து என்ன செய்யலாம் என்றார் என் சகோதரர். அந்த கல்லூரி ப்ராஜெக்ட் சீசனில் கிடைத்த பணத்தில் எனக்கு ஒரு தொகையைக் கணக்கு போட்டு எடுத்துக் கொண்டு, இந்த சிஸ்டத்தை வெச்சு அடுத்தடுத்து பிக்கப் பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்! ஏனென்றால் அந்த பிராஜெக்ட் முடிந்துவிட்டால் எனக்கு அங்கே எந்த வேலையும் இல்லை.

ஆமாம்... எனக்கு வேலை போய்விட்டது!

Wednesday, February 5, 2014

நெல்லை பொங்கல்!

பொங்கல்னா என்னப்பா..?

நெல்மணியைத் தந்ததற்காக

உழவர்கள் சூரியனுக்கு நன்றி சொல்ற நாள்..

சூரியன்னா என்னப்பா..?

சும்மா தொணதொணக்காம டிவியைப் பாரு..!


நகரத்து அப்பாவும் மகனும் பேசிக் கொள்வதுபோல இருக்கும் இந்தக் கவிதை எங்கேயோ எப்போதோ படித்தது... புத்தாண்டு பிறக்கும்போதே மனதுக்குள் ஓரத்தில் இந்தக் கவிதையும் வந்து உட்கார்ந்து கொள்ளும். முன்னேயெல்லாம் வாழ்த்து அட்டைகள் இருந்தன... பொங்கலுக்கு ஒருவாரம் முன்பே அந்த அட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பி, கிடைத்த வாழ்த்து அட்டைகளுக்கு நன்றி சொல்லி அட்டை அனுப்பி என்றெல்லாம் பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்த காலம் முன்பு இருந்தது என்று பழங்கதை பேசும் நோக்கமில்லை!

தோப்பு துரவுகளெல்லாம் எங்கோ தென்கோடி கிராமத்தில் கிடக்க, நகரத்து வாழ்க்கையில் முடங்கிக் கிடக்கும் ஒரு விவசாய குடும்பத்து கடைக்குட்டியின் நிறைவுகூறல் மட்டுமே இது!

வெள்ளையடிக்கும் படலமே ஒருவாரம் நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையாக வெள்ளை அடிக்க ஒவ்வொரு அறையின் கதவுகளையும் சுத்தப்படுத்தும் வேலையில் தொடங்கும் எங்கள் பொங்கல் கொண்டாட்டம். சாதாரண நாட்களில் குளங்களில் குளிக்க முடியாது. ஆனால், கதவுகளை சுத்தப்படுத்துவதற்காக கழற்றிக் கொண்டு குளத்துக்கு ஓடுவோம். கதவே கட்டுமரமாக குளத்து நீரின் மேல் கும்மாளமடிப்போம்!

சின்னஞ்சிறு பெண்பிள்ளைகள் இருக்கும் வீடுகளை மார்கழியில் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வீட்டு வாசலில் கோலத்துக்கு நடுவே செம்பருத்தியோ பூசணியோ சாணியில் பூத்திருக்கும். தினம் தினம் புத்தம் புது பூவாக வைக்கப்பட்டு மாலையில் வரட்டியாக தட்டி வைக்கப்படும்! பொங்கலுக்கு முதல்நாள் வாசலில் முற்றத்தில் ஓர் ஓரத்தை ஒதுக்கித் தருவார்கள். அங்கே சின்னதாக மண்ணில் சுவர் வைத்து சிறுவீடு கட்டுவோம். சிறு வீடென்றாலும் அங்கேயும் ஹால், படுக்கையறை, சமையல் அறை என்று எல்லாமும் இருக்கும்.

பொங்கல் தினத்தன்று அந்தச் சிறு வீட்டின் முன்னாலும் காய்கறிகள் படைத்து அரிசிப் பொங்கலிட்டு படைப்போம். (இதில் சிறுவீட்டுக்கு தனியாக பால் காய்ச்சும் வைபவம் வேறு நடக்கும்!) பொங்கலுக்குப் பிறகு சில நாட்கள் அந்த சிறுவீட்டில் விளையாடுவோம்!

சிறுவீட்டுப் பொங்கலை விடுங்கள்பெரிய வீட்டுப் பொங்கல் இன்னும் சுவாரஸ்யம்! பொங்கல் என்றால் என்ன..? என்ற ஐந்து மதிப்பெண் கேள்விக்கு என்ன பதில் எழுதினோமோ அதை அப்படியே செயலிலும் காட்டுவோம். எங்கள் வயலில் விளைந்த நெல்லைக் குத்தி அரிசியாக்கி, எங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் படைத்து, எங்கள் வீட்டு வாசலில் நின்று பொங்கலிட்டு இயற்கையின் தலைமகனான சூரியனுக்கு நன்றி சொல்வோம். (கரும்பும் சில காய்கறிகளும் மட்டும் கடைச் சரக்காக வாங்குவோம்!) பொங்கலுக்கு அடுப்பெரிக்க பனையோலைகள்கூட எங்கள் காட்டில் இருந்துதான் வரும்.

எல்லா திசைகளுக்கும் பொதுவாக பானை வைத்து அதில் அரிசி களைந்த நீரை நிறைத்து அடுப்பில் ஏற்றினாலும் கிழக்கே பால் பொங்கினால் அந்த வருஷம் அமோகமாக இருக்கும் என்பதால் எங்கள் ஆசை கிழக்கு நோக்கித்தான் பொங்கத் துடிக்கும். அனேகமாக எல்லா ஆண்டுமே கிழக்கு நோக்கித்தான் பால் பொங்கும். எங்கள் எல்லோருடைய வேண்டுதலையும் இயற்கை நிறைவேற்றுகிறதோ இல்லையோ எங்கள் ஆச்சி பானையை லேசாக கிழக்கு பக்கம் சரித்து வைத்து சாதிப்பார். அதில் விசேஷம் என்னவென்றால் பால் கிழக்கே பொங்கினால் முதல் குலவை அவரிடமிருந்துதான் வரும்! அத்தனை சந்தோஷம் தெரியும் முகத்தில். போதும் போதாதற்கு அடுப்பை வேறு கிழக்கே சூடு பறக்கும் வகையில் ஓலையை கிழக்கு பக்கமாக வெளியில் இழுத்து வைத்தே எரிப்பார்.

தலையில் முளைத்த கரும்புக் கட்டுகளோடு பொங்கல் படி எடுத்துக் கொண்டு சீர் செய்யச் செல்லும் மச்சினர்களைச் சுமந்தபடி எல்லா திசைகளிலும் கார்கள் விரைந்து கொண்டிருக்கும்.

எங்கள் பகுதியில் ஜல்லிக்கட்டு பழக்கமில்லை. ஆனால், பொங்கல் என்றால் விளையாட்டுப் போட்டிகள் என்பது எழுதப்படாத சட்டம். எவர்சில்வர் சோப்பு டப்பாக்களும் தட்டு தம்ளர்களும்தான் பரிசு என்றாலும் அடுத்த பொங்கல் வரைக்கும் பேசிப் பேசி மாய்வதற்கு கிடைக்கும் வாய்ப்புதான் அந்த விளையாட்டுப் போட்டிகள்! ஒரு கைலி பரிசுக்காக முற்றிலும் பழுக்காத வாழைப்பழத்தையும் ஒரு தட்டு நிறைய பொட்டுக் கடலையையும் விக்கி விக்கிச் சாப்பிட்ட சங்கரன் மாமாவின் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாமல் சச்சின் சாதனை போல இருக்கிறது! அரை கிளாஸ் தண்ணீரை மீதம் வைத்திருந்தது அவருடைய தனிப்பட்ட சாமர்த்தியம்!

பொங்கல் அன்று கையில் ஒரு முழும் கரும்பும் இன்னொரு கையில் சிறுவீட்டுக்காக வைத்த சாணி வராட்டிகளுமாக ஆற்றை நோக்கி புறப்படுவோம். கூடவே சர்க்கரைப் பொங்கலும் தேங்காய் பழமும் இருக்கும். ஆற்றில் போய் சாணி வராட்டியை வைத்து அதன்மீது இலை வைத்து சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சில்லு, வாழைப்பழத் துண்டு வைத்து தண்ணீரில் விட்டால் கொஞ்ச தூரத்தில் மீன்கள் தாவி வந்து அதை கவ்விச் செல்லும். அதோடு செத்துப் போன ஆச்சிக்கு மூலைக்கு வைத்து கும்பிடுவதற்காக எடுத்த சேலையை நனைத்துப் பிழிந்து கையில் எடுத்துக் கொண்டு வீடு திரும்புவோம்.

அது என்ன மூலைக்கு வெச்சுக் கும்பிடுவது என்பதுதானே உங்கள் அடுத்த கேள்வி. இறந்து போன மூதாதையர்களுக்குகுறிப்பாக கன்னிப் பெண் இறந்து விட்டிருந்தால் ஆண்டுக்கு ஒரு சேலை வாங்கி பொங்கல் அன்று விளக்கு அருகே மூலையில் வைத்து இறந்தவர்களுக்கு பிடித்ததையும் படைத்து அவர்களை நினைத்து வழிபடுவது. அந்தப் பெண் யார் மீதாவது வந்து இறங்கி நல்ல வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போவதுண்டு.

உங்க வீட்டுச் சாமி என்ன சொல்லுச்சுஏதாச்சும் குத்தம் குறை உண்டா என்று பரஸ்பரம் விசாரித்துக் கொள்வார்கள். எங்கள் ஊரில் ஒரு தாத்தாவுக்கு வேட்டி வைத்து கும்பிடுவார்கள். அந்த வீட்டு அத்தை மேலதான் அந்த தாத்தா வருவாரு. அரைமணி நேரத்துல ரெண்டு சுருட்டு குடிச்சுருவா அந்த அத்தைஇல்லேகுடிச்சிருவாரு அந்த தாத்தா! மத்த நேரமெல்லாம் பீடி வாசனைகூட பிடிக்காத அந்த அத்தை சுருட்டு குடிக்கறது ஆச்சரியமா இருக்கும். ஆனாலும் தாத்தாவே இறங்கி வரும் நம்பிக்கை முன்னால் அத்தையின் சுருட்டு சுவாரஸ்யமில்லாத விஷயமாகிவிட்டது.

பொங்கலில் தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று பல வகைகள் இருப்பதுபோல அந்த வரிசையில் நகரத்து பொங்கலும் சேர்ந்திருக்கிறது. பிடிவாதமாக வீட்டு வாசலில் வைத்து பொங்கலிடும் எங்கள் நடவடிக்கை எங்கள் அபார்ட்மெண்டில் சிறப்பு நிகழ்ச்சிகளாகவே பார்க்கப்படும். நாங்கள் நகரத்துக்குள் விழுந்துவிடாமல் கிராமத்தின் எல்லையில் நிற்பதாகவே தோன்றுகிறது.

புதிதாக அபார்ட்மெண்டில் வீடு வாங்கியபோது வீடு பார்க்க வந்திருந்த அப்பா சொன்னார்ஏண்டாஉன் வீட்டு தரை கீழ்வீட்டுக் காரனோட கூரைஉன் வீட்டு கூரை மேல்வீட்டுக்காரனோட தரைஇந்தப் பக்கத்து சொவரு பக்கத்து வீட்டுக்காரனோடதுஅந்தப் பக்கத்து சொவரு அந்தப் பக்கத்து வீட்டுக் காரனோடது. ஒரு கதவையும் சாவியையும் வெச்சுகிட்டு வீடு வாங்கிட்டேன்னு சொல்றே..? என்ற அப்பாவின் வார்த்தைகளுக்கு என்னிடம் பதில் இல்லை!

அந்த வீட்டையே வீடென்று ஒப்புக் கொள்ளாதவர் கிச்சனில் கேஸ் ஸ்டவ்வில் குக்கரில் பொங்கும் நகரத்து பொங்கலைப் பார்த்தால் என்ன சொல்வார்!

தி இந்து பொங்கல் மலர்













Wednesday, December 25, 2013

இலக்கை விட்டுத் தராதீர்கள்?!


ஜெயசீலன்... ஒருமுறைதான் இவரை சந்தித்தேன்... சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொள்ள திருச்சியில் இருந்து வந்திருந்தார். திருச்சிக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து ஆராய்ச்சி படிப்பின் மீதே ஆர்வமாக இருந்து பல தடைகளைக் கடந்து இங்கிலாந்து வரை சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆச்சரிய மனிதர்!

எப்போதுமே விருந்தினரை அழைப்பதில் இரண்டு வகை இருக்கும். முதலாவது வகை வரப் போகிறவரை எதிர்பார்த்து யூனிட்டே காத்திருக்கும். ஏக மரியாதையோடு வாசலில் போய் அழைத்து வந்து அரங்கில் அமர வைத்து படப்பிடிப்பை நடத்தி அனுப்புவது. பெரும்பாலும் சினிமா பிரபலங்களுக்கு இந்த வரவேற்பு எப்போதுமே கிடைக்கும்.

அடுத்தகட்ட விருந்தினர்களை சூரியவணக்கம் குழுவுக்கு மட்டுமே தெரியும். மற்ற டெக்னீஷியன்கள், ‘யார் சார் இவரு..? என்ன செய்திருக்காரு..?’ என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வந்தபோது, ‘சார்... டிவி ஷூட்டிங்குக்கு வர்றாரு... சட்டைகூட போடாம வந்துட்டாரு..?’ என்றார் ஒரு டெக்னீஷியன். (அப்போது நாங்கள் சிரித்துக் கொண்டோம்... பேட்டியின் முடிவில் இவர்தான் முதல் ஆளாக நம்மாழ்வாரோடு நின்று படம் எடுத்துக் கொள்வார் என்று. அது நடக்கவும் செய்தது!)

ஆனால், பேட்டி முடிந்து செல்லும்போது, எல்லோரும் வலிக்க வலிக்க கைகுலுக்கி வாசல்வரை சென்று வழியனுப்புவார்கள். ஏனென்றால் அவர்கள் செய்திருக்கும் சாதனை அப்படிப்பட்டது.

ஜெயசீலனும் அப்படித்தான். இளமையான மெலிந்த தோற்றம்... இப்படித்தான் இருப்பேன் என்ற பிடிவாதத்துடன் இழுத்து கட்டப்பட்ட வேட்டி என்று முதல் பார்வையில் எந்த ஈர்ப்பும் இல்லாமல் இருந்தார். ஆனால், பேசி முடித்தபோது பெரும் பிரமிப்பு ஏற்பட்டுப் போனது எல்லோருக்கும்!

கல்லூரி காலத்திலேயே டாப் அப் செல் கார்டுகள் விற்று பணம் ஈட்டிய அவருடைய உழைப்பையும் லண்டன் சென்றபிறகுகூட அங்கே ஒரு உணவகத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டே படித்ததும் பஸ் கட்டணத்தை மிச்சப்படுத்த கொட்டும் பனியில் சைக்கிள் மிதித்த கதையையும் அவர் விவரித்தபோது எல்லோருக்குமே சிலிர்ப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பின் முடிவில் தொகுப்பாளர்கள் இன்னும் சிலர் அவரோடு படம் எடுத்துக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக அவரை அழைத்தபோது, ‘அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை...’ என்றார். அப்ப கொஞ்சகாலம் காத்திருக்கலாமா என்றேன். நான் காத்திருப்பேன்... ஆனா, அப்பா நிலைமை தெரியலை... நான் கேட்க வந்தது, படப்பிடிப்பு முடிந்து சீக்கிரமே அதை ஒளிபரப்ப முடியுமா என்றுதான்... வேண்டுகோளாகத்தான் கேட்கிறேன் என்றார்.

திங்கட்கிழமை படப்பிடிப்பு நடத்தி அதை புதன்கிழமை ஒளிபரப்பினோம். அன்று போன் செய்தார் ஜெயசீலன். ‘ரொம்ப நன்றி சார்... நான் பத்தாங்கிளாஸ் படிச்சப்ப நானூற்று ஐம்பதுக்கு மேல மார்க் வாங்கினேன். அதை போன்ல சொன்னப்ப பாஸாகிட்டேல்ல என்றுதான் கேட்டார். அதுதான் அவருக்கு தெரிந்தது. அடுத்து நான் படித்த பட்டப்படிப்போ மேற்படிப்போ என் ஆராய்ச்சியோ அவரை தொடவே இல்லை. ஆனா, இன்னிக்கு பேட்டி பார்த்ததும் கண்ணு கலங்கிட்டாரு... எனக்குத் தெரிஞ்சு நான் எங்கப்பாவை இன்னிக்கு தொட்டுட்டேன்...’ என்றார். நிறைவாக இருந்தது.

அடுத்த வாரம் செவ்வாய் கிழமை மறுபடியும் ஜெயசீலனின் போன்... காலைல அப்பா தவறிட்டாரு சார்... அவரை கடைசியா சந்தோஷப்படுத்துனது உங்க பேட்டிதான்... என் அப்பாவுக்கு சந்தோஷம் தரமுடிஞ்சது... நன்றி சார்...’ என்றார். இந்த நன்றியை என்ன செய்வது..?

சூரிய வ|ணக்கம் பேட்டியின்போது ஜெயசீலன் சொன்ன வார்த்தைகள் இவைதான்... எதற்காகவும் இலக்கை விட்டுத் தராதீர்கள்... விட்டுத் தந்தால் வாழ்க்கை முழுக்க அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது என்று! தான் பேட்டி அளிக்க முன்வந்தபோதுகூட அவர் இலக்கு வைத்திருந்தார், தன் அப்பா இந்த பேட்டியை பார்க்க வேண்டும்... அதற்காகத்தான் பேட்டி என்று! அந்த இலக்கை எட்டிவிட்டார்!

அவர் தந்தையும் சொல்லும் சேதி இதுதான்... இலக்கை விட்டுத் தராதீர்கள்... அதை அடையும் வரை எந்த இழப்பும் உங்களுக்கு வராது என்று!

Friday, December 6, 2013

மற்றும் பலர்! - எல்லாம் முருகன் துணை!

அப்போது நான் திருச்செந்தூரில் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக படிக்கச் சென்றிருந்தேன். ஆதித்தனார் கல்லூரியில் தனி கோர்ஸாக இதை நடத்தினார்கள், சிவந்தி அகடமி சார்பில்! எம்.. எகனாமிக்ஸ் படிச்சுட்டு என்ன செய்யப் போறேஇதையாச்சும் ஒழுங்கா படிசிவில் சர்வீஸ் இல்லைன்னாலும் ஏதோ ஒரு சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி கவர்மெண்ட் வேலைக்குப் போயிறலாம் என்று அப்பா சொன்னதால் அங்கு சேர்ந்தேன். அங்கு போனது பரீட்சை எழுதி ஐஏஎஸ் ஆகிவிட வேண்டும் என்றுதான். ஆனால் போனதற்கு லாபம் பிஎஸ் என்கிற நண்பன் பழனிச்சாமிதான்! அந்த வகுப்புகளில் ஒழுங்காகப் படித்த பழனிச்சாமி தேர்வெழுதி வென்று இன்று சென்னை வானிலியில் முக்கிய இடத்தில் இருக்கிறார். ஆனால், இன்றைய மற்றும் பலரின் பிரதான கதை பழனிச்சாமியைப் பற்றியது அல்ல. எங்களுக்கு பொதுவான ஒரு கதாபாத்திரம் பற்றித்தான்!

சிவந்தி அகடமி மாணவர்கள் நாங்கள் என்றாலும் எங்களுக்கு தங்குவதற்கு விடுதி கிடைக்கவில்லை. உணவு வேண்டுமானால் அங்கே எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை. அது எங்களுக்கு சரிப்பட்டு வரவில்லை. நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் ஒரு லாட்ஜில் மாத வாடகைக்கு அறை எடுத்துக் கொண்டோம். உறைவிடம் கிடைத்துவிட்டதுஉணவு..!

எங்களுக்கு மாலைநேரம்தான் வகுப்பு. அதனால் காலையும் மதியமும் உணவு என்பது பெரும்பாடாக இருந்தது. படிப்பதற்கு எக்கச்சக்கமாக இருக்கும். அதனால் சாப்பாட்டைத் தேடி அலைந்து கொண்டிருக்க முடியாது. திருச்செந்தூர் போன்ற நகரும் ஜனத்தொகை மிகுந்த ஒரு ஆன்மிக ஊரில் சாப்பாடு என்பது யாருக்குமே பிரதானமாக இருக்க வாய்ப்பில்லை. எங்களைப் போல வழியில்லாமல் சிக்கிக் கொண்டவர்கள் பாடு திண்டாட்டம்தான்!

கிடைத்த ஓட்டல்களிலும் கடைகளிலும் சாப்பிட்டுப் பார்த்தோம். எதுவும் செட் ஆகவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபடி ஒருநாள் காலை வழக்கமாக டீ குடிக்கும் கடைக்குப் போனோம். கோவிலுக்குச் செல்லும் வழியில் இருக்கும் சிறு கடை அது. டீ, காபி., வடை என்ற அளவில் இயங்கும் அந்தக் கடையை கணவனும் மனைவியுமாக ஒரு தம்பதி நடத்தி வந்தனர். அவர்களுடைய சுத்தமான நடவடிக்கை எங்களை அந்த டீக்கடையின் வாடிக்கையாளர்கள் ஆக்கியிருந்தது. சும்மா கேட்டுப் பார்க்கலாமே என்று பேச்சைப் போட்டோம்.

நீங்க ஏன் டிபன் போடுறதில்லை..?’ என்ற எங்கள் கேள்விக்கு, அந்த கணவர், ‘இவ்ளோ சின்ன கடைக்கெல்லாம் யாரு டிபன் சாப்பிட வருவாங்கடீயும் வடையும்தான் ஓடும்…’ என்றார். ஆனால், எங்கள் கேள்வியின் உள் அர்த்தம் அந்த பெண்மணிக்கு தெரிந்திருந்தது. நேரடியாகவே கேட்டார். ‘உங்களுக்கு தினமும் டிபன் செய்து தரணுமா..?’ என்று. ஆமாம் என்பது போல தலையசைத்தோம்.

நாளைக்கு வாங்க…’ என்று சொல்லி அனுப்பினார். அடுத்த நாள் காலையில் அந்த டீக்கடைக்கு எதிர் மண்டபத்தில் எங்களுக்கு இலை போட்டார். சுடச்சுட இட்லி, சட்னி பறிமாறினார். சாம்பார் செய்யலைஎன்றார். அவர் வீட்டுக்காக செய்து வைத்திருந்த பொடியைக் கொடுத்தார். ஏங்கிக் கிடந்த எங்களுக்கு வீட்டுச் சுவை..! அப்படியே மத்தியானம் சாப்பாடு போடுறீங்களா..? என்றோம்.

கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘தினமும் சாம்பார், ரசம், ரெண்டு வகை கறி, மோர்னு போட முடியாது. குழம்பு, மோர், கறினு வைக்கலாம். ஓகேயா..? என்றார். ஓகே என்று சொல்ல வைத்தது இட்லியின் சுவை!

அப்பாடாசாப்பாடு பிரச்னை தீர்ந்தது என்ற நினைப்போடு நிம்மதியான எங்களுக்கு அடுத்தநாளே இடி இறங்கியது. காலை டீ சாப்பிட சென்றபோதே, ‘அண்ணேஇன்னிக்கு டிபன் குடுக்க முடியாது போல இருக்கு..?’ என்றார் அந்த அக்கா. விஷயம் என்னவென்றால், உன் வியாபாரத்துக்கு எங்க மண்டபத்தை பயன்படுத்திக்கிறியா..? என்று மண்டப மேலாளர் விரட்டிவிட்டாராம். சில நொடிகள் யோசித்த நாங்கள், ‘பரவாயில்லைஇந்த பெஞ்ச்சில் உட்கார்ந்துக்கறோம்…’ என்றோம். கிட்டத்தட்ட சாலையில் வெட்ட வெளியில் கிடந்தது பெஞ்ச்.

சங்கடத்தோடு பறிமாறினார் அந்த அக்கா. இட்லிக்கு பதிலாக இளந்தோசைதக்காளி சட்னி. ‘ரோட்டுல உட்கார்ந்து சாப்பிட வெச்சுட்டாங்களேமதியம் உங்க லாட்ஜுக்கு வேணா கொண்டாந்துடட்டுமா..? என்றார். ஆனால், அது கொஞ்சம் தொலைவுகூடவே எத்தனை பாத்திரங்களை அள்ளிக் கொண்டு வர வேண்டும்என்ற யோசனை வேறு. பரவாயில்லை, பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டோம். மதியமும் கிட்டத்தட்ட ரோட்டுக் கடை சாப்பாடுதான்!

அடுத்தநாள் சென்றபோது பெஞ்சை மறைத்து ஒரு திரை கட்டப்பட்டிருந்தது. ரோட்டுல போற வர்றவங்க பார்த்துகிட்டே போறது எங்களுக்கு சங்கடமா இருக்குஅதான்என்றார் அந்த அக்கா. ‘உங்களை சிரமப்படுத்தறோம்…’ என்றோம். ‘அண்ணேஉங்க தயவுல எங்க புள்ளைக டிபன் சாப்பிடுதுங்கநாங்க ரெண்டு பேரும் மத்தியானம் சுடுசோறு சாப்பிடுதோம்சும்மா இருங்க…’ என்றார் அந்த அக்கா. அவர் டீ வேண்டுமா என்பதைத் தாண்டி எதுவுமே பேசுவதில்லை.

நடுவே வந்த சனி ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் வெரைட்டி சாதமும் முட்டையும் பார்சல் கட்டிக் கொடுத்தார். கிட்டத்தட்ட வீட்டு சாப்பாடு போல தினம் ஒரு வகை கிடைத்தது. ஒருநாள் நாங்கள் இட்லி சாப்பிட்டு விட்டு எழுந்ததும் அந்த வழியே சென்ற ஒரு குடும்பம், ‘இட்லி கிடைக்குமா..?’ என்றது. நிமிர்ந்து எங்களைப் பார்த்த அக்காவின் கண்களில் ஈரம்! அதன்பிறகு எங்களைத் தவிர ஏழெட்டு பேராவது காலை டிபனுக்கு வரத் தொடங்கினார்கள். அதேபோல மதியமும் கூடுதலாக நாலைந்து சாப்பாடு போகத் தொடங்கியது.

நான் படிப்பை ஏறக்கட்டிவிட்டு ஊர் திரும்பிய ஓராண்டு கழித்து அப்பா அம்மா எல்லாரும் திருச்செந்தூருக்குச் சென்றோம். என் கண்கள் அந்த டீக்கடையைத் தேடின. ஆனால், அந்த இடம் சுத்தமாக துடைத்து எடுக்கப்பட்டு இருந்தது. யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. சின்ன மனச் சுமையோடு கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் அண்ணே என்று ஒரு குரல். டீக்கடைக்கார அக்கா ஒரு ஓட்டலில் இருந்து இறங்கி ஓடி வந்தார்.

என்ன அண்ணேபார்க்காத மாரி போறிய..?’ என்றார். ‘நான் பழைய இடத்துல தேடுனேன்…’ என்று சொல்லிவிட்டு அம்மா அப்பாவை அறிமுகப்படுத்தினேன். கையைப் பிடித்து இழுக்காத குறையாக ஓட்டலுக்குள் அழைத்துச் சென்றார். இடம் விசாலமாக இருந்தது. நாலைந்து பெஞ்ச்கள் போடப்பட்டிருந்தன. எல்லாவற்றிலும் ஆட்கள் இருந்தார்கள். இட்லி, பொங்கல் என்று எல்லா இலைகளும் நிரம்பியிருந்தன.

இது லீஸ் கடைசீக்கிரம் சொந்தமாக்கிரணும். எல்லாம் உங்க கை ராசிஉங்க ரூபத்துல முருகன் வந்து வழிகாமிச்சுட்டாரு. உங்க பேரும் பழனி அண்ணன் பேரும் முருகன் பேருதானவேற என்னத்த நான் சொல்லபழனி அண்ணன் எப்படி இருக்காருபேச்சு வார்த்தை இருக்கா..?’ என்று விசாரித்தபடியே, ‘அண்ணனுக்கு டீ போடுங்கசர்க்கரை கம்மியா இருக்கட்டும்…’ என்று பழைய வசனத்தைப் பேசினார். டீ மேடையில் அக்காவின் கணவர் கருமமே கண்ணாக டீ ஆற்றிக் கொண்டிருந்தார். கண்களால் வரவேற்றதோடு சரி!

திரும்பி கல்லாவைப் பார்த்தேன்அக்கா இலைகளில் சட்னி, சாம்பார் பார்த்து ஊற்றிக் கொண்டே சொன்னார். ‘அதுக்கு மட்டும் சம்பள ஆள் வெச்சிருக்குசமையலும் சப்ளையும் நாமதான்சாப்டுட்டு போறியளா..?’ என்றார்.

மனசு நிறைந்துவிட்டது!

Wednesday, November 27, 2013

கிரியேட்டிவ் ஹெட்!

காமேஸ்வரி அத்தை என்ன படித்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அத்தை என்றால் அப்பா கூடப் பிறந்தவரோ இல்லை அம்மாகூடப் பிறந்தவருக்கு வாழ்க்கைப்பட்டவரோ கிடையாது. வேலைக்காக அப்பா ஊர் ஊராகச் சென்றபோது ஒரு ஊரில் நாங்கள் குடிபோன வளவு வீடுகளில் பக்கத்து வீட்டில் குடியிருந்தார் என்பதால் எனக்கு அத்தை!

என்னுடைய பள்ளிக்கூட காலத்தில் என்னை அசத்திய பெண்மணி. அந்த வீட்டுக்குக் குடிபோன ரெண்டாம் நாள் அத்தை எங்கள் வீட்டுக்கு வந்தார். வீட்டின் நிறைகுறைகள் எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னார். அப்பாவின் வேலை, அம்மாவின் படிப்பு, எங்களுடைய சொந்த ஊர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார். தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் ப\ற்றியும் விசாரிப்பார்கள் என்று காத்திருந்தவருக்கு பெரிய அதிர்ச்சி. எங்கம்மா எதுவுமே கேட்காமல் காபி குடிக்கிறீங்களா என்று மட்டும் கேட்டதும் அத்தைக்கு கொஞ்சம் பொசுக்கென்று போய்விட்டது.

ஆனாலும் சொல்லாமல் போவதாக இல்லை. அங்கேதான் முதன்முதலாக கிரியேட்டிவிட்டி என்றால் என்னவென்று நான் பார்த்தேன். ‘சரிம்மாநான் கிளம்பறேன்உங்க அண்ணாச்சி சாப்பாட்டுக்கு வந்திருவாக...!’ என்றார். எங்க அம்மாவுக்கு வேறு ஆப்ஷனே இல்லை என்பதால், ‘சரி போயிட்டு வாங்கஆமாஅண்ணாச்சி என்ன செய்றாங்க..?’ என்றார்.

ஊரைச் சுத்திட்டு சுத்திட்டு வந்து சாப்புடுவாருஇப்ப பாதி ஊரைச் சுத்தியிருப்பாருபசி வந்ததும் வீட்டுக்கு வந்துருவாருசாப்டுட்டு மீதி ஊரைச் சுத்தப் போவாரு…’ என்றார் அத்தை. கேள்வி கேட்ட அம்மாவுக்கு ஐயோ பாவம் என்றாகிவிட்டது. ஆனால், கழுத்தில் ஒற்றை வடம், காது, மூக்குகளில் கல் வைத்த தங்கம், செழிப்பான புடவை என்று வறுமையில் இருப்பது போல தோற்றமில்லாத அத்தையைப் பார்க்கும்போது செலவுகளை எப்படி சமாளிக்கிறார் என்ற கேள்வியும் எழுந்தது.

ஊரைச் சுத்தறாருன்னா வருமானம்ஏதாச்சும் நிலபுலம் இருக்குதா..? என்றாள் அம்மா! அத்தை சின்ன சிரிப்போடு சொன்னார். ‘அதான் ஒண்ணாந்தேதியானா சம்பளம் வந்திரும்லஊரைச் சுத்தறதுன்னா சும்மா இல்லைஅவரு போஸ்ட் மேனா இருக்காரு…’ என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். அம்மாவுக்கு கடுப்பாக இருந்ததோ என்னவோ தெரியாதுஎனக்கு ஆச்சரியமாக இருந்தது.

என் வீட்டுக்காரர் போஸ்ட் மேனாக இருக்கார் என்று சொல்லியிருந்தால் அது ஒற்றை வரி தகவலாக இருந்திருக்கும். ஆனால், அதற்கு ஒரு திரைக்கதை எழுதி அந்த ஒரு நிமிடத்தில் சோகம், காமடி, ஆச்சரியம் என்று பலவித உணர்வுகளைக் கொண்டு வந்த காமேஸ்வரி அத்தைதான் நான் பார்த்த முதல் கிரியேட்டிவ் ஹெட்! இத்தனைக்கும் அத்தை பள்ளிக்கூட லெவலைத் தாண்டியதில்லை என்றுதான் அவர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர்களுடைய குடும்பத்தில் வருமான ஆதாரம் போஸ்ட் மேன் மாமாதான். அவர் சம்பளத்தில்தான் மாமா, அத்தை, வசந்தா அக்கா, ரவி அண்ணா, சுந்தர் அண்ணா எல்லாரும் சாப்பிட வேண்டும். ரவி அண்ணா வேலைக்காக அதையும் இதையும் முயற்சி செய்து பார்த்து அலைந்து கொண்டிருந்தார். பாதிநேரம் ஏதாவது வேலை விஷயமாக வெளியூரில் அலைந்து கொண்டிருக்கும் கேரக்டர். வசந்தா அக்காவுக்கு மாப்பிள்ளை முடிவாகி இருந்தது. சுந்தர் அண்ணா ஸ்கூல் படித்து முடித்து விட்டிருந்தார்.

இதற்கிடையே நாங்களும் ஊர் மாறி வந்துவிட்டோம். பிறகு ஒருநாள் தென்காசியில் கோவிலுக்கு விளக்கு போட அம்மாவோடு போயிருந்தபோது காமேஸ்வரி அத்தையைப் பார்த்தேன். சுந்தர் அண்ணா என்ன பண்றாங்க..? என்றேன். அவர் பத்தாங்கிளாஸ் முடிச்சான்லஇப்ப விஓவா இருக்கான். என்றார். அடடேபரவாயில்லையேஸ்டேட் கவர்மெண்ட்ல வேலைன்னா நல்ல விஷயம்தான் என்றேன். வேலை நல்ல வேலைதான்அவனுக்கு செலவுக்கு காசு குடுத்துதான் உங்க மாமா சம்பளமெல்லாம் கரையுதுஎன்றார். என்ன சொல்றீங்க அத்தை..? என்றேன். ஆமாப்பாவி ஓன்னா வெட்டி ஆபீசர்னு சொல்ல வந்தேன்பா..! என்றார். சிரித்துக் கொண்டேன். அதன்பிறகு மாமாவைப் போலவே சுந்தர் அண்ணாவும் போஸ்ட் மேன் வேலைக்குப் போய்விட்டார்.

அதன்பிறகு நீண்டநாள் கழித்து அண்ணன் திருமணத்துக்கு பத்திரிகை , கொடுப்பதற்காக போயிருந்தேன். சந்தோஷமாக பத்திரிகையை வாங்கிக் கொண்ட அத்தை, ‘பாபுநீ என்ன பண்றே..?’ என்றார்.

சென்னையிலே மீடியாவுல காமேஸ்வரி அத்தை வேலையைப் பார்த்துகிட்டிருக்கேன்..! என்றேன்!

Friday, November 8, 2013

சீதாம்மா!


அப்போது நான் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் பள்ளிக்கூடத்தின் மாணவத் தலைவர்தான் இலக்கிய மன்றத்துக்கும் தலைவர். ஆக, எனக்கு இரட்டைப் பொறுப்பு. பள்ளி இலக்கிய மன்ற விழாவுக்கு விருந்தினரைத் தேர்வு செய்ய மன்ற செயலாளர் சுப்புராஜுடன் அலைந்து திரிந்துவிட்டு களைப்போடு அவன் வீட்டுக்குச் சென்றோம்.

அம்மா... இவன் பாபு... ரெண்டு பேருக்கும் சாப்பாடு போடு...என்று சொல்லிவிட்டு கைகால் கழுவ பின்கட்டுக்கு கூட்டிச் சென்றான். அப்போதே அம்மா என்று அழைக்காமல் அவ்வா என்று அழைக்கலாம் போல வயோதிகத்தில் இருந்தார் சுப்புவின் அம்மா! என் வீட்டில் அம்மாவின் சாப்பாட்டைத் தவிர வேறு சாப்பாடு அறியாத எனக்கு அந்தச் சாப்பாடு வேறு விதமாக ருசித்தது.

சுப்பு அவர்கள் வீட்டில் நாலாவதாகப் பிறந்தவன். மூத்த அக்காவுக்கு திருமணம் ஆகி, அண்ணனுக்கு திருமணம் ஆகி, இளைய அக்காவுக்கு திருமணம் ஆகி பல குழந்தைகளுக்கு அவ்வாவாகி விட்டதால் அம்மாவுக்கு தோற்றத்திலேயே அவ்வாத்தனம் வந்துவிட்டது. சுப்புவும் அவனுக்குப் பிறகு தம்பி கிருஷ்ணாவும் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

அதன்பிறகு பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளில் சுப்பு வீடே கதி என்று ஆகிவிட்டது. எப்போது போனாலும் உரிமையோடு தட்டு எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு அந்த வீட்டில் எனக்கு சுதந்திரம் இருந்தது.

அம்மாவுக்கு முடியலைடா என்று படுத்திருப்பார். ஆனாலும் டீ போட்டுத் தரட்டுமா என்று எழுந்து வருவார். இல்லம்மா நாங்க கடைல பார்த்துக்கறோம் என்றாலும் எனக்கும் குடிக்கணும் போல இருக்குடா என்று சொல்லி டீ குடிக்க வைத்துவிட்டுதான் விடுவார்.

பேரக் குழந்தைகளுக்காக எப்போதும் பண்டம் செய்து கொண்டே இருப்பது அம்மாவின் இயல்பு. எப்போதுமே வீட்டில் எண்ணெய் வாசனை அடித்துக் கொண்டே இருக்கும். சனி ஞாயித்துக் கிழமைகள் என்றால் பிள்ளைகள் நிறைந்து வீடே கலகலவென்று இருக்கும். அண்ணி, அக்கா எல்லோரும் இருந்தாலும் அம்மா சமையலறையில் ஏதேனும் செய்துகொண்டே இருப்பார்.

எப்போது சென்னையில் இருந்து சென்றாலும் அம்மாவைப் பார்க்காமல் வரமாட்டேன். ‘என்ன பாபு... எப்படி இருக்க... வேலையெல்லாம் நல்லா போகுதா... எங்க தலைமுறையை நாங்க கழிச்சுட்டோம்... உங்க நைனா தையல்ல கொண்டு வர்றதை வெச்சு ரெண்டு பிள்ளைகளைக் கட்டிக் குடுத்து எல்லாப் பிள்ளைகளையும் படிக்க வெச்சுட்டோம். உங்க காலம் அப்படி இல்லை... கவனமா நடந்துக்கோ...என்பார்.

நைனா கொண்டு வரும் சொற்ப வருமானத்தில் இத்தனை கட்டுசெட்டக குடித்தனம் செய்ததே பெரிய சாதனைதான். அண்ணனை வங்கி அதிகாரி ஆக்கி, அக்காக்களை நல்லவிதமாக கட்டிக் கொடுத்திருப்பதே பெரிய விஷயம்தான். நான் வேலை தேடி சென்னைக்கு நகர்ந்துவிட்ட பிறகு சுப்புவுக்கும் அரசு வேலை கிடைத்துவிட்டது. அவனுக்கும் திருமணம் முடிந்து அவன் தம்பிக்கும் திருமணம் முடிந்த ஒருநாளில் சுப்பு வீட்டுக்குச் சென்றேன்.

அன்று தீபாவளியோ என்னவோஅக்கா, அண்ணா, சுப்பு, அவன் தம்பி என்று எல்லோரும் குடும்ப சகிதமாக கூடியிருந்தார்கள். கொஞ்சம் தளர்ந்த நடையில் வாசலுக்கு வந்த அம்மாவின் புடவை தொடைப்பகுதியில் இருந்த ஈரம் சொன்னது, உள்ளே அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று. அண்ணியின் ஸ்பெஷலான சிக்கன் சமையல் அன்று. ஆனல், அம்மாவும் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருந்தார்.

எனக்கு திருமணம் நிச்சயமானபோது நைனா கொஞ்சம் தளர்ந்து தையல் கடையை மூடிவிட்டார். வீட்டிலேயே மிஷின் போட்டு பொழுதுபோக்காக தைத்துக் கொண்டிருந்தார். நிச்சயத்துக்கு வந்த அம்மாவால் என் திருமணத்துக்கு வர வாய்க்கவில்லை. திருமணத்துக்கு சில தினங்கள் முன்பு நைனா தவறிப் போக, அம்மாவோ சுப்புவோ திருமணத்துக்கு வரவில்லை.

திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு என் மனைவியை அழைத்துக் கொண்டு சுப்பு வீட்டுக்குச் சென்றேன். படுக்கையில் சாய்ந்திருந்த அம்மா, என் மனைவியின் கன்னத்தைத் தடவி சந்தோஷப்பட்டார். ‘பாபுஉன்னால உன் ஆயுசுக்கும் என்னை மறக்க முடியாதுப்பாஏன்னா என் பேருள்ள பொண்ணைக் கட்டியிருக்கியேஆமாஅவளை எப்படிக் கூப்பிடப் போறே..?’ என்றார்.

இப்போதும் நான் என் மனைவியை பெரும்பாலும் அம்மா என்றுதான் கூப்பிடுகிறேன்..!